டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை
x
தினத்தந்தி 13 Oct 2017 2:30 PM IST (Updated: 13 Oct 2017 11:30 AM IST)
t-max-icont-min-icon

டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புதுக்கோட்டையில் தே.மு.தி.க. மாநில துணை செயலாளர் சுதீஷ் குற்றஞ்சாட்டினார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பல பேர் இறந்து வருகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து உதவி செய்யும்படி கட்சி நிர்வாகிகளுக்கு தே.மு.தி.க.நிறுவனத்தலைவர் விஜயகாந்த் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அக்கட்சியின் சார்பில், புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில துணை செயலாளர் சுதீஷ் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். தொடர்ந்து புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு பழம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ரூ.20 கோடி செலவு செய்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு செலவு செய்யும் நிதியை டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணிக்கு பயன்படுத்தினால் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தி இருக்கலாம். எனவே, செயல்படாத அரசாக இருக்கும் தமிழக அரசை கவர்னர் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன், கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் ராமசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Next Story