காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி


காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட முயற்சி
x
தினத்தந்தி 13 Oct 2017 6:00 PM IST (Updated: 13 Oct 2017 12:23 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் சீரான குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

நாமக்கல் நகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்டது பேட்டைகாலனி தெரு. இங்கு உள்ள அருந்ததியர் தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே சீரான குடிநீர் கேட்டும், ஆழ்துளை கிணற்றை சரிசெய்ய வலியுறுத்தியும் அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் கடந்த 6 மாத காலமாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் ஆழ்துளை கிணறு பழுதடைந்து உள்ளதால், தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து உள்ளது. எனவே ஆழ்துளை கிணற்றை சரிசெய்வதோடு, எங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:- கடந்த 6 மாதகாலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்கமுடியாது. அப்பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறை வீதம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சீரான குடிநீர் வழங்கவும், பழுதடைந்து உள்ள ஆழ்துளை கிணற்றை சரிசெய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
அதைதொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பேட்டைகாலனி தெருவிற்கு சென்று பொதுமக்கள் புகார் குறித்து ஆய்வு செய்தார்.

Next Story