பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை


பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை
x
தினத்தந்தி 13 Oct 2017 1:13 PM IST (Updated: 13 Oct 2017 1:12 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரியகுளம்,

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் கும்பக்கரை அருவியும் ஒன்றாகும். பெரியகுளத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள இந்த அருவி சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கும்பக் கரை அருவியில் குளித்து செல்கின்றனர். கொடைக்கானல் மலைப் பகுதியில் மழை பெய்தால் அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கடந்த மாதம் ஆரம்பத்திலேயே கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையினால், வழக் கத்தை விட அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதாலும், ஆபத்தான வழுக்கு பாறை இருப்பதாலும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை உருவானது. இதனால் கடந்த மாதம் முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவி பகுதியில் சேதமடைந்த கம்பிகள் சீரமைக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 9-ந்தேதி அருவிக்கு தண்ணீர் சீராக வரத்தொடங்கியது. இதன்காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நேற்று இரவு கொடைக் கானல் பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

இதன் காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மீண்டும் தடை விதித்தனர்.

Next Story