உச்சிப்புளியில் கிணற்றுக்குள் 3 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு?


உச்சிப்புளியில் கிணற்றுக்குள் 3 ஐம்பொன் சாமி சிலைகள் கண்டெடுப்பு?
x
தினத்தந்தி 13 Oct 2017 1:35 PM IST (Updated: 13 Oct 2017 1:35 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் உச்சிப்புளியில் உள்ள அரசு கிணற்றை தூர்வாரும் போது 3 சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. அவை ஐம்பொன் சிலைகளா? என்பது குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் என்மனங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட உச்சிப்புளி பஸ் நிறுத்தத்தில் உள்ள நிழற்குடைக்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு கடந்த 51 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து இந்த கிணற்றை என்மனங்கொண்டான் ஊராட்சி சார்பில் தூர்வார முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இருமேனி கிராமத்தை சேர்ந்த நாகசாமி மகன் நமச்சிவாயம் தலைமையில் 2 தொழிலாளர்கள் மூலம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் உசிலங்காட்டு வலசை கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் கிணற்றில் இறங்கி மண்ணை அள்ளிக்கொண்டிருந்தார். அப்போது கிணற்றுக்குள் சிறிய அளவிலான 3 சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. உடனே அந்த சிலைகளை எடுத்து வந்து என்மனங்கொண்டான் கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ், உதவியாளர் காளிமுத்து ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

இதில் ஒரு சிலை சுமார் 12 செ.மீ. உயரமும், 250 கிராம் எடையும் இருந்தது. இதேபோல மற்றொரு சிலை 8½ செ.மீ. உயரம் மற்றும் 242 கிராம் எடையும், இன்னொரு சிலை 5 செ.மீ. உயரம் மற்றும் 110 கிராம் எடையும் இருந்தது. அவற்றில் ஒரு சிலை அம்மன் சிலை என்பது தெரியவந்தது. மற்ற 2 சிலைகளை அடையாளம் காண முடியவில்லை.

இவை சுமார் 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதவிர இவைகள் ஐம்பொன் சிலைகளா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கிணற்றுக்குள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் உச்சிப்புளி போலீசாருக்கு கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த 3 சிலைகளும் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story