பனைக்குளம் பகுதியில் வீட்டு கிணறுகளில் மலேரியா கொசுக்கள்


பனைக்குளம் பகுதியில் வீட்டு கிணறுகளில் மலேரியா கொசுக்கள்
x
தினத்தந்தி 13 Oct 2017 1:58 PM IST (Updated: 13 Oct 2017 1:58 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் பனைக்குளம் பகுதியில் உள்ள சில வீட்டு கிணறுகளில் மலேரியா கொசுக்கள் இருந்ததை தொடர்ந்து சுகாதாரத் துறையினர் விரைந்து வந்து கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட கலெக்டர் நடராஜன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சலுக்கான போதிய மருந்துகள், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான வசதிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தி வருகிறார்.

இதுதவிர மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட மலேரியா அலுவலர் உதயகுமார் ஆகியோரது ஆலோசனையின்படி பொதுமக்களுக்கு டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதுடன் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பனைக்குளம் மேற்கு பகுதியில் சில வீடுகளில் உள்ள கிணறுகளில் பூச்சிகள் மற்றும் புழுக்கள் தண்ணீரில் மிதப்பதாக பனைக் குளம் ஊராட்சி செயலர் ரோகிணியிடம் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து புதுவலசை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமார், புதுவலசை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சசிக்குமார் ஆகியோரது உத்தரவின் பேரில் மண்டபம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் புதுவலசை கேசவமூர்த்தி, உச்சிப்புளி முனியாண்டி மற்றும் சுகாதார பணியாளர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கிணறுகளில் அதிகஅளவில் மலேரியா கொசுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டு மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள வீடுகளின் கிணறுகளில் மருந்து ஊற்றப்பட்டது.

Next Story