மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை


மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு; ஆட்டோக்கள் ஓடவில்லை
x
தினத்தந்தி 14 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு நடந்தது. கார், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலப்பகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் உள்ள பழைய வீடு, கட்டிடங்களை சதுர அடி வரி விதிக்கும் வகைக்கு என்று கூறி அதிகாரிகள் வீடுகளில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்து வருகிறார்கள். இதை கண்டித்தும் சதுர அடிக்கு வரிவிதிப்பு செய்து வரியை உயர்த்துவதற்கு நடக்கும் நடவடிக்கையை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மேலும் வரி விதிப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற முடியாமல் கணினி பழுது அடைந்து கிடப்பதை கண்டித்தும் மேலப்பாளையத்தில் உள்ள வணிகர்கள் கூட்டமைப்பு, வியாபாரிகள், அரசியல் கட்சியினர் அனைவரும் சேர்ந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மேலப்பாளையத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் அண்ணா வீதி, சந்தை முக்கு பகுதி, வி.எஸ்.டி. பள்ளி வாசல் பகுதி, பஜார் திடல் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் மேலப்பாளையத்தில் உள்ள கார்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் முகைதீன் அப்துல்காதர், மாவட்ட தலைவர் அந்தோணி செல்வராஜ், துணை தலைவர் உஸ்மான், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஆஸாத்பாதுஷா, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அலி சேக் மன்சூர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் முகைதீன் அப்துல்காதர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட துணைதலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸட்டு மாநகர குழு உறுப்பினர் பேரின்பராஜ், இந்திய கம்யூனிஸ்ட நகர செயலாளர் சேக் மதார், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்கனி, ம.தி.மு.க. பகுதி செயலாளர் ஜமால் ஆகியோர் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மேலப்பாளையத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பின்னர் அவர்கள் உதவி ஆணையாளர் கவிதாவை சந்தித்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆணையாளர், அரசு உத்தரவுபடி அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் சதுர அடி வரிவிதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்குள் அத்துமீறி மாநகராட்சி ஊழியர்கள் யாரும் அளவீடு செய்யமாட்டார்கள். அப்படி அத்துமீறி செயல்படுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story