டெங்கு காய்ச்சலுக்கு அரசு பெண் வக்கீல் பலி


டெங்கு காய்ச்சலுக்கு அரசு பெண் வக்கீல் பலி
x
தினத்தந்தி 14 Oct 2017 4:15 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் டெங்கு காய்ச்சலுக்கு அரசு பெண் வக்கீல் பலியானார். இதனால் தமிழகஅரசை கண்டித்து வக்கீல்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஊரணிபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கவிதா(வயது35). அரசு வக்கீலாக பணிபுரிந்து வந்தார். தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மகளிரணி துணை செயலாளராக இருந்தார். கடந்த ஒரு வாரமாக இவர் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு வார்டில் கவிதா அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுகாலை கவிதா இறந்தார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது மகள் திவ்யாவுடன்(18) தஞ்சையில் வசித்து வந்தார். திவ்யா பிளஸ்-2 படித்து வருகிறார். கவிதா பலியானதை தொடர்ந்து மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

கவிதா இறந்த செய்தி கேட்டு தஞ்சை வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய தமிழகஅரசை கண்டித்து தஞ்சை கோர்ட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திசாலைக்கு வந்தனர். அங்கு சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதற்கு வக்கீல்கள் சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் பாலமுரளி, முன்னாள் தலைவர்கள் கோ.அன்பரசன், சிவசுப்பிரமணியன், நல்லதுரை, அமர்சிங் உள்பட பலர் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

மேலும் இவர்கள் இரும்பு கம்பிகளால் ஆன தடுப்புகளை சாலையின் குறுக்கே இழுத்து போட்டனர். இதனால் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன. 15 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த வக்கீல்கள் அங்கிருந்து எழுந்து பழைய பஸ் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அங்கு அவர்கள் பழைய பஸ் நிலைய முகப்பில் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக எந்த பஸ்சும் பஸ் நிலையத்திற்குள் இருந்து வெளியே வரமுடியவில்லை. உள்ளேயும் செல்ல முடியவில்லை.

இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாவட்ட கலெக்டர் நேரில் வந்தால் தான் மறியலை கைவிடுவோம் என உறுதிபட தெரிவித்தனர். இந்த தகவல் மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ், தாசில்தார் தங்கபிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ஆனால் இவர்களிடம் நாங்கள் பேசுவதற்கு தயாராக இல்லை. டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி தவறிவிட்டது. கலெக்டர் நேரில் வந்து பேச வேண்டும் என்று கூறியதால் அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். நேரம் ஆக, ஆக கலெக்டருக்கு எதிராக வக்கீல்கள் கோஷங்கள் எழுப்பினர். மேலும் இருசக்கர வாகனங்களில் வந்த சிலர் மறியல் நடைபெற்ற இடத்தை கடந்து செல்ல முயற்சி செய்தனர். அவர்களை வக்கீல்கள் தடுத்து நிறுத்தியபோது சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை சமாதானப்படுத்தி வேறுவழியில் அனுப்பி வைத்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வக்கீல்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் மீண்டும் வந்து வக்கீல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வக்கீல்கள் சிலர் கூறும்போது, வக்கீல்களை சந்திக்க தொடர்ந்து கலெக்டர் மறுப்பு தெரிவித்து வருகிறார். ஏழை, எளிய மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் அவற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தவறிவிட்டது. அதிகாரிகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் தான் ஏழைகளின் கஷ்டம் உங்களுக்கும் தெரியவரும். மனசாட்சிபடி செயல்பட்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்து நிறுத்துங்கள் என்றனர்.

மாவட்டத்தில் 36 இடங்கள் டெங்கு காய்ச்சல் பரவும் இடங்களாக கண்டறியப்பட்டு துணை கலெக்டர் தலைமையில் 36 குழுக்கள் அமைக்கப்பட்டு டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர 50 குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் கூறினார். இன்னும் 1 வாரத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ளவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று கூறிய வக்கீல்கள் பின்னர் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு எதுவும் இல்லை. காய்ச்சல் பரவுவதை தடுக்க எல்லாவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரசு வக்கீல் டெங்கு காய்ச்சலால் இறந்தாரா? என்று மருத்துவ அறிக்கையை பார்த்தபின்னர் தான் தெரியவரும். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கின்றன. யாரும் தரையில் படுக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். காய்ச்சல் தீவிரமான பின்னர் அரசு மருத்துவமனைகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் இருந்து யாரையாவது அனுப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.

பின்னர் வக்கீல்கள் நிருபர்களிடம் கூறும்போது, டெங்கு காய்ச்சலால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் அரசு இதை வெளியே சொல்லாமல் மறைக்கிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும். மாவட்ட கலெக்டரும் தனது பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றனர். 

Next Story