நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


நெல்லிக்குப்பத்தில் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:15 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பத்தில் நிலுவைத்தொகை ரூ.140 கோடி வழங்கக்கோரி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்களது விளைநிலத்தில் விளைந்த கரும்புகளை அறுவடை செய்து அரவைக்காக நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்புகிறார்கள். இதற்காக கரும்பு டன் ஒன்றுக்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கான ரூபாய் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டியதுள்ளது. இந்த தொகை கேட்டு விவசாயிகள் பலமுறை போராடியும், நிர்வாகம் நிலுவைத்தொகையை வழங்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு ஆலை கரும்பு விவசாய சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். செயலாளர் தென்னரசு, பொருளாளர் சக்திவேல், துணை தலைவர்கள் திருமலை, கிருஷ்ணன், ரவிகுமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி கலந்து கொண்டு, நிலுவைத்தொகை ரூ.140 கோடி வழங்கக்கோரி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும், கரும்பு விவசாயிகள் ஆலைக்குள் சென்று அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலுவைத்தொகை ரூ.140 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், வழங்கும் வரை இங்கேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினர். பின்னர் விவசாயிகள் ஆலை வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆலை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story