விவசாயிகள் மீது போலீஸ் தடியடி; பதற்றம் 100 பேர் கைது


விவசாயிகள் மீது போலீஸ் தடியடி; பதற்றம் 100 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2017 4:45 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை ஆலை முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதுதொடர்பாக 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கனூர்,

புதுச்சேரி மாநிலம் லிங்காரெட்டிப்பாளையத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு 2016-17-ம் ஆண்டில் கரும்பு வெட்டி அனுப்பிய வகையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 7 கோடி ரூபாய் பட்டுவாடா செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் போனஸ், ஊக்கத்தொகை, கருணைத் தொகை வழங்க வேண்டும், சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கம், அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகம் எதிரே என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக போலீஸ் அனுமதியும் பெறப்பட்டு இருந்தது.

ஆனால் திடீரென்று நேற்று முன்தினம் இரவு இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. அறிவித்தார்.

அதன்படி போராட்டம் நடத்த புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., அவருடைய ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று காலை லிங்காரெட்டிப்பாளையம் பெட்ரோல் பங்க் எதிரே திரண்டனர். அங்கிருந்து போராட்டம் நடத்துவதற்காக டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் சர்க்கரை ஆலை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். போலீசார் நடத்திய தடியடியில் 10 பேர் காயம் அடைந்தனர்.

தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ., கரும்பு விவசாயிகள் என சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர். உடனே பெண்கள் அங்கு திரண்டு வந்து போலீஸ் வேன் முன்பு தரையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலும் மேலும் அங்கு பதற்றம் அதிகரித்தது. திடீர் மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திவிட்டு கைதானவர்களை வேனில் அழைத்துச் சென்றனர்.

பத்துக்கண்ணு சந்திப்பு பகுதிக்கு சென்றதும் அங்கு டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. மற்றும் விவசாயிகள் வேனில் இருந்து இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து மீண்டும் வேனில் ஏற்றி வில்லியனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்தநிலையில் லிங்காரெட்டிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மற்றொரு பிரிவினர் விவசாய கடன் தள்ளுபடி கோப்பில் கையெழுத்திடாத கவர்னர் கிரண்பெடியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், திருமால், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் காட்டேரிக்குப்பம் போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வில்லியனூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் சிறிதுநேரத்தில் அவர்கள் அனைவரும் அங்கிருந்து விடுவிக்கப்பட்டனர். 

Next Story