சாயத்தொழிற்சாலையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


சாயத்தொழிற்சாலையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2017 3:45 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் சாயத்தொழிற்சாலையை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னிமலை,

சென்னிமலை பகுதியில் சில சாய தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் சாயக்கழிவுகள் ஓட்டக்குளம் வழியாக பசுவபட்டி பகுதிக்குள் செல்கிறது. மேலும் அந்த கழிவுகள் அங்குள்ள குளம், குட்டைகளை மாசுபடுத்துகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் புகார் கூறி வந்தனர்.

இந்த நிலையில், சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் முறைகேடாக வெளியேற்றும் சாய தொழிற்சாலைகளை நிரந்தரமாக தடை செய்யக்கோரி சென்னிமலையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் சென்னிமலை பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இளமதி அர்ச்சுனன் தலைமை தாங்கினார். தி.மு.க ஒன்றிய செயலாளர் பி.செங்கோட்டையன், கோபி (காங்கிரஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கி.வே.பொன்னையன் கலந்து கொண்டு சாயக்கழிவுகளை முறைகேடாக வெளியேற்றும் தொழிற்சாலைகளை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார். பின்னர் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, புரட்சிகர விவசாய தொழிலாளர் முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில், சாயக்கழிவுகளை வெளியேற்றும் சாய தொழிற்சாலைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

Next Story