அந்தியூரில் தடையை மீறி சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்; விவசாயிகள் 36 பேர் கைது


அந்தியூரில் தடையை மீறி சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்; விவசாயிகள் 36 பேர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2017 4:15 AM IST (Updated: 14 Oct 2017 3:47 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம், அந்தியூரில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் 36 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

தமிழ்நாடு கரும்பு வளர்ப்போர் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று பகல் 11 மணிக்கு சத்தியமங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் கரும்பு ஆலை முன்பு ஒன்று திரண்டார்கள். பின்னர் சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மேலும் கோஷங்களும் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க கமிட்டி தலைவர் தேவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி முத்துசாமி, துணைச்செயலாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இதில் 25 பேர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகி முத்துசாமி கூறும்போது, ‘நேற்று (அதாவது நேற்று முன்தினம்) அனுமதி பெற்று மாநிலத்தலைவர் ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது போலீசார் தடியடி நடத்தி எங்களை கலைத்தனர். இதில் ரவீந்திரன் உள்பட பல விவசாயிகள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், மேலும் கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.300 கொடுப்பதாக கரும்பு ஆலை உரிமையாளர்கள் கூறினார்கள். ஆனால் அவர்கள் ஒப்புக்கொண்டபடி உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்’ என்றார். இந்த நிலையில் அங்கு வந்த சத்தியமங்கலம் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 15 பேரை கைது செய்தனர்.

இதேபோல் அந்தியூர் அருகே ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று பகல் 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையான ரூ.1,620 கோடியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். அதேபோல் கூட்டுறவு சங்க ஆலை ரூ.350 கோடி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அந்தியூர் போலீசார் ஒரு பெண் உள்பட 21 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 

Next Story