கர்நாடக பா.ஜனதாவில் மீண்டும் கருத்துவேறுபாடு: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடும் அதிருப்தி


கர்நாடக பா.ஜனதாவில் மீண்டும் கருத்துவேறுபாடு: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 14 Oct 2017 3:54 AM IST (Updated: 14 Oct 2017 3:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக பா.ஜனதாவில் மீண்டும் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டிற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

பெங்களூரு, 

கர்நாடக பா.ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அதன் தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் மேலிட தேர்தல் பொறுப்பாளரான மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ், எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மத்திய மந்திரி அனந்தகுமார், ஷோபா எம்.பி. மற்றும் குழுவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி தொடங்கும் பரிவர்த்தனா யாத்திரையை வெற்றி பெற வைப்பது, பிரசார குழு மாற்றி அமைக்கப்பட்டது, பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது, மத்திய அரசின் சாதனைகளை வீடு, வீடாக கொண்டு சேர்ப்பது, மாநில காங்கிரஸ் அரசின் தோல்விகளை கண்டித்து போராட்டங்களை நடத்துவது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியில் மீண்டும் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டிற்கு பிரகாஷ் ஜவடேகர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இணைந்து பணியாற்ற...

இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, கட்சியில் மீண்டும் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன. இதற்கு என்ன காரணம் என்று கேட்டார். கட்சியை மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்த அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்பதை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்படுங்கள் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் சிறிய விஷயங்களுக்கு எல்லாம் குழப்பத்தை உண்டாக்கினால், அது தொண்டர்களுக்கு தவறான செய்தியை தெரிவிப்பதாக அமைந்துவிடும் என்றும், நமது இலக்கை அடைய வேண்டுமென்றால் கருத்துவேறுபாடுகளை மறந்து செயல்படுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது. சிறிய குழப்பங்களை ஊடகங்களிடம் தெரிவிப்பதால் அது கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகம் வரும்போது, அனைவரும் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆனால் மீண்டும் பழைய கலாசாரத்தையே கட்சியில் உருவாக்குவது சரியல்ல என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

Next Story