கிராமப்புறங்களில் பணிபுரிய மறுத்த 4,548 டாக்டர்களின் பதிவு ரத்து மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை


கிராமப்புறங்களில் பணிபுரிய மறுத்த 4,548 டாக்டர்களின் பதிவு ரத்து மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 14 Oct 2017 4:29 AM IST (Updated: 14 Oct 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

கிராமப்புறங்களில் பணிபுரிய மறுத்த 4 ஆயிரத்து 548 டாக்டர்களின் பதிவை ரத்து செய்து மராட்டிய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள், படிப்பு முடிந்ததும் கிராமப்புற மருத்துவமனைகளில் ஓராண்டு தங்கியிருந்து சேவை புரியும் வகையில், மாநில அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

ரத்து

எனினும், அரசின் இந்த உத்தரவை 4 ஆயிரத்து 548 டாக்டர்கள் புறக்கணித்தனர். இதனால், அவர்கள் அனைவரது மருத்துவ பதிவையும் மாநில அரசின் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனரகம் (டி.எம்.இ.ஆர்) அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக டி.எம்.இ.ஆர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அபராதம்

கிராமப்புறங்களில் ஓராண்டு சேவைபுரிய மறுப்பு தெரிவிக்கும்பட்சத்தில், அதற்கான அபராதத்தை டாக்டர்கள் செலுத்த வேண்டும். அதன்படி, எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் ரூ.10 லட்சமும், முதுநிலை மருத்துவம் படித்தவர்கள் ரூ.50 லட்சமும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி டாக்டர்கள் ரூ.2 கோடியும் செலுத்த வேண்டும்.

ஆனால், இந்த 4 ஆயிரத்து 548 பேரும் கிராமப்புற மருத்துவமனைகளில் சேவைபுரியவும் இல்லை, அதற்கான அபராதம் செலுத்தவும் இல்லை. ஆகையால், அவர்களது பதிவு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போலி டாக்டர்கள்

இதுபற்றி மருத்துவக்கல்வி துறையை சேர்ந்த சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒவ்வொரு டாக்டரும் தங்களது பதிவை மராட்டிய மெடிக்கல் கவுன்சிலில் புதுப்பிக்க வேண்டும். பதிவு செய்யவில்லை என்றால், அவர்கள் போலி டாக்டர்களாகவே கருதப்படுவார்கள். சட்ட நடவடிக்கைக்கும் உட்படுவர்” என்றார்.

மேலும், கிராமப்புற மருத்துவமனைகளில் சேவைபுரியும் டாக்டர்களுக்கு படிகளும், ஊதியமும் அதிகமாகவே வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

உட்கட்டமைப்பு வசதி இல்லை

இதனிடையே, கிராமப்புற மருத்துவமனைகளில் சேவைபுரிய டாக்டர்கள் தயக்கம் காட்டுவது ஏன்? என்று கேட்டதற்கு இந்திய மருத்துவ கவுன்சிலின் இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் சாகர் முந்தடா விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

ஊதியம் பற்றி எந்தவொரு டாக்டரும் புகார் தெரிவிக்கவில்லை. உண்மை என்னவென்றால், கிராமப்புறங்களின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. மேலும், டாக்டர்களுக்கான வீடுகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இருந்தாலும், அங்கு டாக்டர்கள் ஓராண்டு தங்கியிருந்து பணிபுரிய வேண்டும் என்று அரசு எதிர்பார்க்கிறது.

அரசு பொறுப்பை தட்டிக்கழிக்கிறது

உட்கட்டமைப்பு வசதிகளை பராமரிப்பதிலும், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை சுமுகமாக சப்ளை செய்வதிலும் அரசு அதன் பொறுப்பை தட்டிக்கழிக்கிறது. மைனர் அறுவை சிகிச்சைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறுகின்றன. ஆனாலும், அதற்கு தேவையான ஒரு கருவி கூட அங்கு இருப்பதில்லை. இதுபோன்ற தருணங்களில், பொதுமக்களின் கோபத்துக்கு டாக்டர்கள் ஆளாகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story