ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2017 2:30 PM IST (Updated: 14 Oct 2017 11:47 AM IST)
t-max-icont-min-icon

சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்திரம்தொட்டி, மாதிரி பள்ளி வரை சாலை அமைத்து தர வேண்டும். சத்திரம்தொட்டி, ஒட்டர்பாளையம், பசவனப்புரம் ஆகிய கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கனமழையால் சேதமடைந்து குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும், பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் தளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணபவா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தளி பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலைகளை சீரமைத்து கொடுக்க வேண்டும். எங்கள் கிராமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வருகிற 30-ந்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இதர ஆவணங்களை அரசிடம் திருப்பி ஒப்படைப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story