தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
x
தினத்தந்தி 14 Oct 2017 11:51 AM IST (Updated: 14 Oct 2017 11:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிய சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில், முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல் வரவேற்று பேசினார்.
விழாவில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு புதிய பஸ்நிலைய கட்டுமான பணிகளை அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரிக்கு அண்மையில் வந்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான சிப்காட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடும் வறட்சி காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. தற்போது பெய்துள்ள பருவமழையால் பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பி காவிரி ஆற்றில் கலக்கிறது. மழையால் தென்பெண்ணையாற்றில் கலக்கும் உபரி தண்ணீர், நீர்மேலாண்மை திட்டங்கள் இல்லாததால் கடலில் கலந்து வீணாகிறது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்பதை இந்த அரசு ஏற்காமல் மூடி மறைப்பதே டெங்கு பரவுவதற்கு முக்கிய காரணம். டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் 40 பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக கூறுகிறார். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த, தேவைப்பட்டால் பிரதமர் வீட்டின் முன் அமர்ந்தும் போராட்டம் நடத்துவேன்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ. பாரிமோகன், மாவட்ட தலைவர் பாலாஜி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணைசெயலாளர் சுப்பிரமணியன், சோகத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வேடியப்பன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். பா.ம.க. நடத்திய போராட்டம் காரணமாக கோர்ட்டு உத்தரவு மூலம் 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டு கால திராவிட இயக்க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உருவாகி உள்ளது. அதற்கு மாற்றாக பா.ம.க.வை தேர்வு செய்ய மக்கள் காத்திருக்கிறார்கள். தேர்தல் வரும்போது எங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.

இதைத் தொடர்ந்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. மோட்டாங்குறிச்சி ஊராட்சியில் வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story