20 சதவீத போனஸ் வழங்க கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


20 சதவீத போனஸ் வழங்க கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2017 1:07 PM IST (Updated: 14 Oct 2017 1:06 PM IST)
t-max-icont-min-icon

20 சதவீத போனஸ் வழங்கக் கோரி டேன்டீ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோத்தகிரி,

தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகம், அரசு ரப்பர் மற்றும் முந்திரி தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் டேன்டீ தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டி பகுதியில் நேற்று காலை டேன்டீ தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் கைகாட்டி டேன்டீ அலுவலகத்திற்கு பேரணியாக சென்றனர்.
பேரணியை பந்தலூர் ஒருங்கிணைந்த தோட்ட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஜெபமாலை தொடங்கி வைத்தார். பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சோசலிச தொழிலாளர் சங்க தலை வர் கரு.வெற்றிவேல் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தொழிலாளர்கள், 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிவகுருநாதன், பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், சீத்தாலட்சுமி, பாப்பா, ராஜ்குமார் உள்பட தோட்ட தொழிலாளர் சங்க நிர்வா கிகள் பலர் கலந்து கொண் டனர்.

அப்போது தொழிற்சங்கத்தினர் கூறுகையில், தமிழக அரசு மற்றும் டேன்டீ நிர்வாகம் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் சோசலிச தொழிலாளர்கள் சங்க தலைவர் கரு.வெற்றிவேல் தலைமையில் இன்றும் (சனிக்கிழமை) கோத்தகிரி டானிங்டனில் இருந்து மார்க்கெட் திடல் வரை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) குன்னூரில் உள்ள டேன்டீ மேலாண்மை இயக்குனர் அலுவலக முற்றுகை போராட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கோத்தகிரி டேன்டீ அலுவலக வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் பணியாற்றி வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என டேன்டீ நிர்வாகம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் கோரியும் பி.டபுள்.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., எல்.பி.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த டேன்டீ தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் பந்தலூரில் கண்டன பேரணி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பந்தலூர் மேங்கோரேஞ்ச் முனீஷ்வரன் கோவில் அருகே காலை 10½ மணிக்கு தொடங்கிய பேரணி முக்கிய சாலை வழியாக சென்று பஜாரை அடைந்தது. அதைத்தொடர்ந்து பந்தலூர் பஜாரில் டேன்டீ தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி, பி.டபுள்.யூ.சி. பொதுச்செயலாளர் சுப்பிரமணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், எல்.பி.எப். துணை பொதுச்செயலாளர் மாடசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரமேஷ் உள்பட தோட்ட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பகல் 12 மணிக்கு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

Next Story