1,100 பேர் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்


1,100 பேர் டெங்கு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்
x
தினத்தந்தி 14 Oct 2017 2:03 PM IST (Updated: 14 Oct 2017 2:03 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையில் 1,100 பேர் ஈடுபட்டுள்ளனர் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர்,

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சிவகாசி அருகே அண்ணாமலையார் நகரில் வருகிற 23- ந்தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான மேடை அமைக்கும் இடத்தை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று காலை பார்வையிட்டார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அனைத்து இடங்களிலும் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு கண்டறியும் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் உடனடியாக சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை சார்பில் ஆயிரத்து 100 பேர் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடுதலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. மாவட்டத்தில் எங்கும் டெங்கு காய்ச்சல் இல்லை என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சிவகாசியில் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி 6.4 கி.மீ. தொலைவிலும், பெண்களுக்கான மாரத்தான் போட்டி 3.5 கி.மீ. தொலைவிலும் தனித்தனியாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சிவஞானம் தலைமை தாங்கினார். மாரத்தான் போட்டிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆண்களுக்கான போட்டியில் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்களான குணாளன் முதலிடமும் மகஜேந்திர கோகுல் 2-ம் இடமும் பிடித்தனர். மீனாட்சிபுரம்பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாரிசரஸ் 3-வது இடத்தை பிடித்தார்.

பெண்களுக்கான போட்டியில் சிவகாசி எஸ்.எச்.என். மேல்நிலைப்பள்ளி மாணவி கார்த்தீஸ்வரி முதலிடமும் சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளி மாணவி மகேஸ்வரி 2-ம் இடமும் சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி மாணவி பாக்கியலட்சுமி 3-ம் இடமும் பெற்றனர். இவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

அனைவருக்கும் 23-ந் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசு வழங்குகிறார். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் பின்னர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சந்திர பிரபா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், சிவகாசி கோட்டாட்சியர் தினகரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகுமார், தாசில்தார்ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story