ஆப்பிரிக்க கழுதைகளை காவுகொள்ளும் ‘சீனப் பசி’!


ஆப்பிரிக்க கழுதைகளை காவுகொள்ளும் ‘சீனப் பசி’!
x
தினத்தந்தி 14 Oct 2017 2:08 PM IST (Updated: 14 Oct 2017 2:08 PM IST)
t-max-icont-min-icon

ஒரு நாட்டின் வழக்கம், இன்னொரு நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துவது பற்றிய செய்தி இது.

ஆம், சீனாவுக்கு அதிக அளவில் தேவைப்படுவதால், ஆப்பிரிக்காவில் கழுதைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.
சீனாவில் ஆரோக்கிய உணவுப்பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்திசெய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுகின்றன. தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்கக் கழுதைகள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. சீனாவில் கழுதை இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது.

சீனாவில் கழுதைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவைத் தவிர்த்து பிற நாடுகளில் அதைப் பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படி அந்நாட்டுக்கு நடைபெறும் கழுதை ஏற்றுமதியால் ஆப்பிரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. காரணம், கழுதைகள் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்வில் போக்குவரத்து மற்றும் விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக அந்நாட்டில் உள்ள ஏழ்மையான சமூகங்களில் கழுதைகள் மிகவும் முக்கியமான விலங்குகள்.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் கழுதையின் விலை இரட்டிப்பாகியுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு திருடர்கள் கழுதைகளைத் திருடுவதால், அவற்றை நம்பியுள்ள குடும்பங்கள் தடுமாறுகின்றன.

உதாரணத்துக்கு, கென்யாவில் தண்ணீர் விநியோகிக்கும் தொழில் செய்துவரும் அந்தோணி மவுப் வனியமாவுக்கு 29 வயதாகிறது. சுமார் நான்கு ஆண்டுகளாக கார்லோஸ் என்ற கழுதையை அவர் தன்னோடு வைத்திருந்தார். தொழிலும் நல்லபடியாக நடந்துகொண்டிருந்தது.
“கழுதையின் உதவியால் தலைநகருக்கு வெளியே உள்ள பகுதியில் இடமும், வீடு ஒன்றும் வாங்கினேன், பள்ளிக்கான கட்டணங்களை செலுத்தியது மட்டுமின்றி என்னுடைய குடும்பத்தையும் நன்கு பார்த்து கொண்டேன்” என்கிறார், இரு குழந்தைகளின் தந்தையான அந்தோணி.

கென்யா தலைநகர் நைரோபிக்கு வெளியே இருக்கும் ஒங்காட்டா ரோங்கை என்ற கிராம வாழ்வியல் சூழலில் அந்தோணியும், அவரது கழுதையும் ஓர் அங்கமாக இருந்தனர். ஆனால் அது தற்போது பழைய கதை.

“ஒரு காலை நேரத்தில் நான் கண் விழித்தபோது என்னுடைய கழுதை காணாமல் போயிருந்தது. ஊர் முழுக்க சுற்றித் திரிந்தபிறகு, அதன் தோல் உரிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்ததைக் கண்டுபிடித்தேன்” என்று தான் மிகவும் நேசித்த கழுதை அநியாயமாகக் கொல்லப்பட்டது பற்றி கண்ணீருடன் கூறுகிறார் அந்தோணி.

தற்போது, வேறொரு கழுதையை வாடகைக்கு எடுத்துள்ள அந்தோணி, தண்ணீர் விநியோகத்துக்குப் பயன்படுத்தப்படும் கேன்களை சுமந்து செல்லும் வண்டியை இழுப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறார்.

தொழில் நன்றாக இருக்கும் நாளில் கூட, அவர் தினசரி சம்பாதிக்கும் மூன்று அல்லது நான்கு டாலர்களில் பாதி தொகை கழுதையின் உரிமையாளருக்கு வாடகையாகப் போய்விடுகிறது. சொந்தமாக புதிய கழுதை வாங்கப் பணமில்லாமல் சிரமப்படுகிறார் அந்தோணி.

கென்யாவில் நிலவும் கழுதைகளின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டுக்கு அந்நாட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய கழுதை இறைச்சி வெட்டும் கூடங்களும் ஒரு காரணம்.

அந்நிறுவனங்கள் ஒரு நாளைக்கு சுமார் 150 விலங்குகளை வெட்டி, அதன் இறைச்சியை ‘பேக்’ செய்து குளிரூட்டுவதுடன், அதன் தோலை ஏற்றுமதிக்காகப் பதப்படுத்தும் திறன் கொண்டவை.
அங்கு, கழுதையின் இறைச்சி மற்றும் தோல் பதப்படுத்துவதற்காக எடுக்கப்படுவதற்கு முன் ஒரு துப்பாக்கியை கொண்டு அதன் தலையில் சுடப்படுகிறது.

‘’முன்பு கழுதைகளுக்கு சந்தை இருக்கவில்லை. அப்போது, மக்கள் தங்களிடமிருந்த ஆடு, மாடுகளை விற்று குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தை கட்டினார்கள். ஆனால், தற்போது அவற்றைக் காட்டிலும் கழுதைகளை பொதுமக்கள் அதிகளவில் விற்றுவருவதை நான் நேரிடையாகப் பார்க்கிறேன். சீனாவினால்தான் தற்போது கழுதைகளுக்கு அதிகக் கிராக்கி ஏற்பட்டு அதனால் பலருக்கு லாபம் கிடைக்கின்றது. முன்பு, கழுதைகளால் லாபம் எதுவும் கிடையாது” என்று கழுதை இறைச்சி வெட்டும் நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி ஜான் கரியூகி கூறுகிறார்.
கழுதை இறைச்சி நிறுவனங்களில் அவை முறையாக வெட்டப்பட்டு பதப்படுத்தப்படுகின்றனவா என்று சீன வியாபாரிகள் நேரடியாகக் கண்காணிக்கிறார்கள்.

கழுதையின் தோல்களைக் கொதிக்க வைக்கும்போது, பழுப்பு நிறத்திலான ஜெலட்டின் என்ற ஒருவகை வழுவழு பொருள் உற்பத்தி ஆகிறது. அது, சீனாவின் பிரபலமான ஆரோக்கிய உணவுகள் மற்றும் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்யும் ‘எஜியோ’ என்ற பொருட்களைத் தயாரிக்க அத்தியாவசிய மூலப்பொருளாக இருக்கிறது.

ஆனால் ஆப்பிரிக்காவில் இறைச்சிக்காக கழுதைகள் நடத்தப்படும் விதம் பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இவை கொல்லப்படுவதற்கு முன்பு மிக மோசமான நிலைமைகளைச் சந்திக்கின்றன. இவை மிக மோசமாக நடத்தப்படுவதை இங்கிலாந்தைச் சேர்ந்த கழுதை நல அறக்கட்டளை ஒன்றும், தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ‘ஆக்ஸ்பெக்கர்ஸ்’ என்ற அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் புலனாய்வுச் செய்தியாளர்கள் சிலரும் கண்டுபிடித்துள்ளனர்.

கழுதைகளின் தோலை எளிதாக உரிப்பதற்கு ஏதுவாக அவை பட்டினி போடப்படுகின்றன என்றும், முனை மழுங்கிய ஆயுதங்களால் அவை கொடூரமாக அடித்துக் கொல்லப்படுகின்றன என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால் சர்வதேச நெருக்கடி காரணமாக இந்த நிலைமை மெல்ல மெல்ல மாறிவருவதாகக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவில் உகாண்டா, தான்சானியா, போட்ஸ்வானா, நைஜர், பர்க்கினோ பாஸோ, மாலி, செனகல் போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் இருந்து சீனாவுக்கு கழுதை இறைச்சி மற்றும் உடல் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்கனவே தடைவிதித்துவிட்டன.
மனிதனின் அகோரப் பசி, இன்னும் எத்தனை விலங்குகளைத்தான் காவு வாங்குமோ?

Next Story