நெல்லையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
நெல்லையில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.
நெல்லை,
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், டெங்கு கொசு ஒழிப்பு களப்பணியாளர்களிடம் கொசு புழு ஒழிப்பு அபேட் திரவம் பயன்படுத்துவது தொடர்பாக அறிவுரைகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து, ராஜராஜேசுவரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு, தெருக்களில் உள்ள குப்பைகளை மாஸ் கிளினிங் மூலம் உடனடியாக அகற்றிடவும் பயன்பாடற்று அடுக்கி வைக்கப்பட்டுள்ள டயர்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் புதிய கட்டிடங்களை கட்டும் கட்டுமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழக அரசின் உத்தரவுப்படி 15 நாட்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். காலை 6 மணி முதலே மாநகராட்சி, நகரசபை, நகர பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்பார்வை செய்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தில் 2 ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வீடுகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களில் கொசு உற்பத்தி இல்லாத வண்ணம் விழிப்புணர்வு நடவடிக்கைகளை கட்டிட நிறுவனங்கள் செய்ய வேண்டும். அலட்சியமாக உள்ள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் மற்றும் அபராதம் விதிக்கப்படும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் கூறும் விழிப்புணர்வுகளை பின்பற்றி நெல்லை மாவட்டம் டெங்கு இல்லாத மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) இளம் பகவத், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயணநாயர், மேலப்பாளையம் உதவி ஆணையாளர் கவிதா, மாநகர நல அலுவலர் டாக்டர் பொற்செல்வன், சுகாதார அலுவலர் சாகுல்அமீது, உதவி செயற்பொறியாளர் கருப்பசாமி, மருத்துவ அலுவலர் டாக்டர் ரமா ரமேஷ், தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.