லாரி – வேன் நேருக்குநேர் மோதல்; 3 பேர் பலி 10 பேர் படுகாயம்
கடையநல்லூர் அருகே லாரி– வேன் நேருக்குநேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடையநல்லூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரகுமானியாபுரத்தை சேர்ந்தவர் யூனுஸ். இவர் சவுதி அரேபியா மெக்காவுக்கு புனித பயணம் செல்கிறார். இவரை வழியனுப்ப அவரது உறவினர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்று வழி அனுப்பிவிட்டு ஒரு வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேனில் டிரைவருடன் 13 பேர் இருந்தனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 5.15 மணி அளவில் அந்த வேன், கடையநல்லூர் மங்களாபுரம் வளைவில் திரும்பியது. அப்போது எதிரே செங்கோட்டைக்கு ஒரு சிமெண்டு லாரி வேகமாக வந்தது. அந்த லாரியை, வாசுதேவநல்லூரை சேர்ந்த கார்த்திக் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக லாரியும், வேனும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கி கவிழ்ந்தது. லாரி அருகில் உள்ள மின்கம்பத்தை பிடுங்கிச் சென்றவாறு ஒரு கட்டிடத்தில் மோதி நின்றது.
வேனை ஓட்டி வந்த டிரைவர், அச்சன்புதூர் நெடுவயலை சேர்ந்த மணிகண்டராமன் (27) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பலியானார். வேனில் இருந்த 12 பேரும் படுகாயம் அடைந்து கூக்குரலிட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். வேன் கவிழ்ந்ததால் அடியில் சிக்கியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் கடையநல்லூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வேனின் தகடுகளை வெட்டி எடுத்து உள்ளே உயிருக்கு போராடிய 12 பேரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் கடையநல்லூர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த காஜாமைதீன் மனைவி சைபுன்னிசா (27), அவரது சகோதரி மகன் அப்துல் ரஹிம் மகன் முகமது ராஷித் (10) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
அதே பகுதியை சுர்ந்த அமானுல்லா மனைவி கயர்நிஸா (55), முகம்மது மைதீன் மனைவி பாத்திமா (43), அப்துல் காதர் (37), காஜாமைதீன் மகமமுதா ரிஷானா, நடு அய்யாபுரத்தை சேர்ந்த இப்னு ஜலாலுத்தின் மனைவி பாத்திமா (43) அவரது மகள் சப்ரீன் (16), மகன் முகம்மது சுகைப்(12) ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். லாரி டிரைவர் காயமின்றி தப்பினார்.
தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். லாரி மற்றும் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவீர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்தில் ரத்த சிதறல்களுடன் பொருட்கள் உடைந்து சிதறி போர்க்களம் போல் காணப்பட்டது. விபத்து நடந்த மங்களாபுரம் வளைவு பகுதியின் இருபுறமும் அடர்ந்த பெரிய மரங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்ற மரங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதியில் சில மரங்களை வெட்டி போக்குவரத்தை சீர்செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடையநல்லூர் ரகுமானியாபுரத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 2 பேர் மற்றும் நெடுவயலை சேர்ந்த வேன் டிரைவர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.