பழனி அருகே நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சாவு


பழனி அருகே நோயால் பாதிக்கப்பட்ட காட்டு யானை சாவு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே நோயால் பாதிக்கப்பட்ட யானை பரிதாபமாக இறந்தது.

நெய்க்காரப்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் பழனி வனச்சரகத்தில் யானை, மான், சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இவை உணவு, தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிக்கு வருவது வழக்கம். குறிப்பாக புளியம்பட்டி பகுதிக்கு காட்டுயானைகள் தண்ணீர் தேடி அதிக அளவில் வருகின்றன. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் குட்டியுடன் உலா வந்த ஒரு பெண் யானை நேற்று முன்தினம் அதிகாலை புளியம்பட்டியை சேர்ந்த வீரப்பன் என்பவரின் தோட்டத்தில் மயங்கி கிடந்தது.

அதன் அருகில் குட்டி யானை நின்றுகொண்டிருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் பழனி வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனவர் கணேஷ்ராம், கால்நடை டாக்டர்கள் சுரேஷ், முருகன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர்களை யானையின் அருகில் செல்ல விடாமல் குட்டியானை தடுத்தது.

மேலும் தாய் யானை மயங்கி கிடப்பது கூட தெரியாமல் அதனை நீண்ட நேரம் எழுப்ப முயன்று பாச போராட்டம் நடத்தியது. இதையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து குட்டியானையை அங்கிருந்து விரட்டினர். அதன்பிறகு மயக்க நிலையில் இருந்த யானைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. அதன் பலனாக யானை எழுந்து நடக்க தொடங்கியது. ஆனாலும் அதன் நோய் முழுமையாக குணமாகாததால் வனப்பகுதிக்குள் அது சென்றுவிடாதபடி வனத்துறையினர் தடுத்தனர்.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் அந்த யானை இருந்தது. ஆனால் நேற்று அதிகாலை அந்த யானை மீண்டும் மயங்கியது. இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் பாலகிருஷ்ணன், பழனி வனவர் கணேஷ்ராம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை பார்வையிட்டனர். பின்னர் டாக்டர்கள் யானையை பரிசோதனை செய்த போது அது இறந்திருப்பது தெரியவந்தது. அதன் உடல் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

இது குறித்து கால்நடை டாக்டர்களிடம் கேட்டபோது, மயக்க நிலையில் கிடந்த பெண் யானைக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பலனாக மாலையே அது எழுந்து நடக்கத்தொடங்கியது. அதன் பின்னர் வனப்பகுதிக்குள் அது சென்றுவிடாமல் தோட்ட பகுதியிலேயே வைத்து தீவிரமாக கண்காணித்து வந்தோம். இரவு அதற்கான உணவு, மருந்துகள் அளிக்கப்பட்டது. அதன் உடல்நலத்திலும் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வேளையில் அது இறந்துள்ளது. யானையின் உடலில் இருந்து சில பாகங்களை எடுத்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளோம். ஆய்வின் முடிவு வந்த பின்பு தான் அது எதனால் இறந்தது என்பது தெரியவரும் என்றனர்.


Related Tags :
Next Story