மலைஉச்சியில் உள்ள நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவல பாதையில் தவறி விழுந்த பக்தர் கதி என்ன?


மலைஉச்சியில் உள்ள நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவல பாதையில் தவறி விழுந்த பக்தர் கதி என்ன?
x
தினத்தந்தி 15 Oct 2017 4:45 AM IST (Updated: 15 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

மலை உச்சியில் உள்ள தலைமலை நல்லேந்திரபெருமாள் கோவிலில் கிரிவல பாதையில், தவறி விழுந்த பக்தரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் தா.பேட்டையை அடுத்த நீலியாம்பட்டி கிராமத்தில் தலைமலை அமைந்துள்ளது. இந்த மலையின் உச்சியில், தரையில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் நல்லேந்திரபெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமையும், தொன்மையும் வாய்ந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

தலைமலை பெருமாளை வணங்க செல்லும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பானதாகும். நினைத்த காரியம் நிறைவேறிய பக்தர்கள், கோவிலை சுற்றி சுமார் 2 அங்குலமே உள்ள விளிம்பில் கிரிவலம் செல்வார்கள். அதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும். கிரிவலம் செல்லும்போது ஆயிரக்கணக்கான அடி உள்ள பள்ளத்தில் தவறி கீழே விழுந்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

மூலிகை மரங்களை கொண்ட அடர்ந்த, பசுமையான இந்த தலைமலையில் உள்ள நல்லேந்திரபெருமாள் கோவிலுக்கு செல்ல, மலையை சுற்றி 5 பாதைகள் உள்ளன. இந்த மலையில் சஞ்சீவராய பெருமாள் என்று அழைக்கப்படும் நல்லேந்திரபெருமாள் சுயம்புவாக வீற்றிருக்கிறார். தானே உருவான பெருமாள் என்பதால், தானாய் வளர்ந்த தலைமலை பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

தலைமலையின் உச்சிகோவிலின் மூலஸ்தானத்தில் சுயம்புவாக வளர்ந்த நல்லேந்திரபெருமாளின் அருகிலேயே சீனிவாச பெருமாள் ருக்மணி, சத்யபாமா ஆகிய தெய்வங்களும், உற்சவராக வெங்கடாஜலபதியும், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ அம்மன்களாகவும், கோவில் தென்புறத்தில் அலமேலுமங்கை தாயார், அதன் அருகில் மகாலட்சுமி அம்மனும் வீற்றிருக்கின்றனர். புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோவிலின் மேல்பகுதியில் உள்ள எண்ணெய் கொப்பரையில், பெரிய வேட்டியால் திரி தயாரித்து, நெய் ஊற்றி திருக்கோடி தீபம் ஏற்றி வழிபாடு நடத்துவர். இந்த தீப ஒளியை மலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், அங்கிருந்தபடியே பெருமாளை தரிசனம் செய்வது தனிச்சிறப்பு.

இந்நிலையில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வந்தனர். அப்போது மலை உச்சிக்கு சென்று பெருமாளை வழிபட்ட பக்தர் ஒருவர் இரண்டு முறை கிரிவலம் சுற்றி விட்டு, மூன்றாவது முறையாக கிரிவலம் சுற்றும்போது தவறி கீழே விழுந்தார். இதனைக்கண்ட மற்ற பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் அந்த பக்தர் கிரிவலம் சுற்றி வரும்போது, கீழே விழும் காட்சியை அருகில் இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

ஆபத்தான மலை பள்ளத்தில் விழுந்த பக்தரின் நிலை என்ன ஆனது? என்பது குறித்து தெரியவில்லை. பக்தர் தவறி விழுந்ததால் கிரிவலம் செல்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இது குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கிரிவல பாதையில் இருந்து தவறி விழுந்தவரின் பெயர், விவரங்கள் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவர் திருச்சி மாவட்டம் முசிறி பெரியார் நகரை சேர்ந்த தங்கராஜின் மகன் ஆறுமுகம் (வயது 38) என்பதும், சரக்கு ஆட்டோ டிரைவரான ஆறுமுகத்துக்கு திருமணமாகி தாரா என்கிற மனைவி உள்ளார் என்பதும் தெரியவந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. குழந்தை பாக்கியம் வேண்டி அவர் கிரிவலம் சென்ற போது தான் தவறி விழுந்தார்.

அவருடைய கதி என்ன? என்றும் தெரியவில்லை. இந்த தலைமலை பகுதி நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் ஆறுமுகத்தை மீட்கும் பணியில் நாமக்கல் மாவட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த கோவில் இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மிகவும் ஆபத்தான பகுதியில் சன்னதி உள்ளதால் கிரிவலம் செல்ல ஏற்கனவே கோவில் நிர்வாகத்தின் சார்பில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோவில் அருகே கிரிவலம் செல்ல தடை என விளம்பர பதாகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதனையும் மீறி பக்தர்கள் கிரிவலம் செல்வதால், இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

Next Story