கண்ணில் மிளகாய் பொடி தூவி ஜவுளி வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பொருட்கள் கொள்ளை


கண்ணில் மிளகாய் பொடி தூவி ஜவுளி வியாபாரியிடம் ரூ.2½ லட்சம் பொருட்கள் கொள்ளை
x
தினத்தந்தி 15 Oct 2017 3:45 AM IST (Updated: 15 Oct 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஜவுளி வியாபாரியின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை, 

மதுரையை சேர்ந்த ஜவுளி வியாபாரி குலாம் (வயது 42). தொழில் விஷயமாக இலங்கை சென்றிருந்த அவர் நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து ஆட்டோவில் புறப்பட்ட அவர், அண்ணா சாலை தர்கா அருகே வந்து இறங்கினார். தான் கொண்டுவந்த 2 பெரிய பைகளையும் கையில் தூக்கிக்கொண்டு, சாலையோர நடைபாதையில் நடந்து சென்றார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், திடீரென குலாமின் அருகே வந்து, கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை அவரது கண்ணில் தூவினர். இதனால், வலிதாங்க முடியாமல் அலறித்துடித்த குலாம், கையில் இருந்த 2 பைகளையும் கீழே போட்டார்.

ரூ.2½ லட்சம் மதிப்பு

அந்த 2 பைகளையும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேரும் தூக்கிக்கொண்டு, தப்பிச் சென்றுவிட்டனர். அந்த பைகளில், விலை உயர்ந்த கேமரா, ஆடம்பர ஆடைகள் மற்றும் இலங்கை பணம் ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை குலாம் வைத்திருந்தார். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

கண் எரிச்சலுடன் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்த குலாம், நடந்தது குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். 

Next Story