புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் தேர்வு


புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் தேர்வு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:15 AM IST (Updated: 15 Oct 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

புதுவை பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவராக மாணவி நர்மதா தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தரை நியமிக்க வலியுறுத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாணவர் பேரவை தேர்தல் 3 கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தலைவர், துணைத்தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் விவரங்களும் வெளியிடப்பட்டன.

இதில் மாணவர் பேரவை தலைவராக மாணவி நர்மதா வெற்றி பெற்றார். அவருக்கு அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் தி.மு.க. மாணவரணி அணி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க. தெற்கு மாநில அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவி நர்மதாவுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். அப்போது அவர், கூறுகையில், ‘தி.மு.க. சார்பில் பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்’ என்றார்.

பின்னர் மாணவி நர்மதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. அனைவரின் ஒத்துழைப்புடன் அவை படிப்படியாக சரிசெய்யப்படும். குறிப்பாக பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர துணைவேந்தர் நியமிக்கக்கோரி வலியுறுத்துவோம் என்றார்’ 

Related Tags :
Next Story