விவசாயிகள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து போலீஸ் நிலையத்தை, என்.ஆர்.காங்கிரசார் முற்றுகை


விவசாயிகள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து போலீஸ் நிலையத்தை, என்.ஆர்.காங்கிரசார் முற்றுகை
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

கரும்பு விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்து திருக்கனூர் போலீஸ் நிலையத்தை என்.ஆர்.காங்கிரசார் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கனூர்,

லிங்காரெட்டிப்பாளையத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு தாரைவார்க்கக்கூடாது, கடந்த வருடத்தை போல் இந்த ஆண்டும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர். இதை மீறி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான டி.பி.ஆர்.செல்வம் தலைமையில் கரும்பு விவசாயிகளும், ஆலை தொழிலாளர்களும் சர்க்கரை ஆலை நோக்கி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினார்கள். இதில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயம் அடைந்தனர். டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிந்தது.

இந்தநிலையில் விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீசாரை கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கோரியும் என்.ஆர்.காங்கிரசார் நேற்று காலை திருக்கனூர் போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து திருக்கனூர் போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் டி.பி.ஆர்.செல்வம் எம்.எல்.ஏ. அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட என்.ஆர்.காங்கிரசாரை சமாதானம் செய்தார். போலீசார் தடியடி நடத்தியது குறித்து போலீஸ் டி.ஜி.பி.யிடம் புகார் செய்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி சமாதானம் செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட என்.ஆர்.காங்கிரசார், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக திருக்கனூரில் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story