தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சேத்தியாத்தோப்பு என்ஜினீயர் உள்பட 8 பேர் பலி


தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சேத்தியாத்தோப்பு என்ஜினீயர் உள்பட 8 பேர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சேத்தியாத்தோப்பு என்ஜினீயர் உள்பட 8 பேர் பலியாகினர்.

கடலூர்,

தமிழகத்தில் கடந்த 2 மாதமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடலூர் மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி உள்ளது. இந்த நிலையில் நேற்று சேத்தியாத்தோப்பு அருகே என்ஜினீயர் ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். அதன் விவரம் வருமாறு:-

சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் பூவழகன் மகன் முத்தழகன் (வயது 28). என்ஜினீயர். இவர் சென்னையில் தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனால் அங்கிருந்து முத்தழகன், சொந்த ஊருக்கு கடந்த 8-ந் தேதி வந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில், டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து முத்தழகனுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முத்தழகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை அறிந்த சுகாதார துறையினர் ஒரத்தூர் பகுதி முழுவதும் சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் முத்தழகனின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ள னர். இந்த நிலையில் முத்தழகன் இறந்ததால் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சாவு எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.

இதே போல் சேலம் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் நந்தகோகுல் (9). தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த இவன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லியாம்பாளையத்தை சேர்ந்த குப்புசாமியின் 2-வது மகன் ஹரினீஷ் (16). பிளஸ்-1 படித்து வந்த இவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஹரினீஷ் பரிதாபமாக இறந்தார்.

இதே போல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சின்னபருவாச்சியை சேர்ந்தவர் இளையராஜா மனைவி ராஜேஸ்வரி (23) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் ராஜேஸ்வரி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேஸ்வரி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் சரவணன் மனைவி சாவித்திரி (27). நிறைமாத கர்ப்பிணியான இவர் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சாவித்திரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

உசிலம்பட்டி அருகே உள்ள சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்த கணேசன் மகள் மகாதேவி (15). 10-ம் வகுப்பு மாணவியான இவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதே போல் உசிலம்பட்டி அருகே உள்ள துரைச்சாமிபுரம் புதூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் கபிலன்(9). இதே ஊரில் 4-வது படித்து வந்த இவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

வாடிப்பட்டியை அடுத்த போடிநாயக்கன்பட்டி திடீர் நகரை சேர்ந்த சுப்பிரமணி மகள் காயத்ரி(19). இவர் நிலக்கோட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட காயத்ரி பரிதாபமாக இறந்தார். 

Related Tags :
Next Story