தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் உள்பட வெவ்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் உள்பட வெவ்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக கே.எஸ்.ஆர்.டி.சி. அறிவித்துள்ளது.
பெங்களூரு,
வருகிற 18-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்(கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கூடுதலாக 1,500 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதன்படி, வருகிற 17-ந் தேதியில் இருந்து 19-ந் தேதி வரை பெங்களூருவில் இருந்து கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கும், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங் களுக்கும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பெங்களூரு கெம்பேகவுடா பஸ் நிலையம், மைசூரு ரோடு பஸ் நிலையம், சேட்டிலைட் பஸ் நிலையம் ஆகியவற்றில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயங்க உள்ளன. சாந்தி நகர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கும்பகோணம், திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் உள்பட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், ஆந்திர மாநிலத்துக்கும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
முன்பதிவு
www.ksrtc.in என்ற இணையதளம் வழியாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். டிக்கெட் முன்பதிவுக்காக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் இருந்து வெளியூருக்கு செல்வது, வெளியூரில் இருந்து பெங்களூருவுக்கு திரும்புவது ஆகியவற்றுக்கு சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீத சலுகையும், ஒரே டிக்கெட்டில் 4 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீத சலுகையும் வழங்கப்படும்.
தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் கர்நாடகத்தின் பிற பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு வருகிற 22-ந் தேதி கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கண்ட தகவல் கே.எஸ்.ஆர்.டி.சி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story