தண்டவாளத்தை கடக்க முயன்ற அண்ணன், தம்பி ரெயில் மோதி பலி இருவரும் என்ஜினீயர்கள்
தண்டவாளத்தை கடக்க முயன்ற என்ஜினீயர்களான அண்ணன், தம்பி ரெயில் மோதி பலியான சம்பவம் கோபர் ரெயில் நிலையத்தில் நடந்தது.
மும்பை,
ரத்னகிரியை சேர்ந்தவர் பிரமோத் (வயது41). இவரது தம்பி சச்சின் (39). இருவரும் என்ஜினீயர்கள். பிரமோத் பன்வெலிலும், சச்சின் புனேயிலும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அண்ணன், தம்பி இருவரும் பால்கர் மாவட்டம் வசாயில் வசிக்கும் உறவினர் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்தனர்.
பின்னர் மாலை வீடு திரும்புவதற்காக அவர்கள் வசாயில் இருந்து கோபர் ரெயில் நிலையத்திற்கு வந்து இறங்கினார்கள்.
ரெயில் மோதி பலி
பின்னர் இருவரும் மெயின் வழித்தடத்தில் உள்ள கோபர் ரெயில் நிலையத்திற்கு செல்ல அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் கசாரா நோக்கி சென்ற மின்சார ரெயில் அண்ணன், தம்பி இருவர் மீதும் மோதி சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். இது பற்றி அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு தானே மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அண்ணன், தம்பி ரெயில் மோதி பலியான சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story