முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை வெட்டிய வழக்கில் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண்


முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை வெட்டிய வழக்கில் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் 6 பேர் சரண்
x
தினத்தந்தி 16 Oct 2017 4:45 AM IST (Updated: 16 Oct 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

பட்டாபிராம் அருகே முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 6 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

ஆவடி,

பட்டாபிராமை அடுத்த அண்ணம்பேடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 55). முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். கடந்த 11–ந் தேதி வீட்டில் அன்பழகன் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில், படுகாயமடைந்த அன்பழகன் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்பழகனை வெட்டியதாக அண்ணம்பேடு பகுதியை சேர்ந்த செந்தில்நாதன் (36), மைக்கேல்ராஜ் (31), சதாசிவம் (36), பரத் (27) மற்றும் திருமழிசை பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ் (24), தசரதன் (25) ஆகிய 6 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நீதிபதி முன்பு சரணடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். பட்டாபிராம் போலீசார் அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

* குடும்பத்தகராறில் ஆவடியை அடுத்த சேக்காடு தனலட்சுமி நகரை சேர்ந்த சுகன்யாவை (27) தாக்கியதாக அவரது கணவர் என்ஜினீயரான மோகன்ராஜை (31) போலீசார் கைது செய்தனர்.

* புழல் கடப்பா சாலையில் மாவா புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக, லட்சுமிபுரத்தை சேர்ந்த கஸ்தூரி (40) கைது செய்யப்பட்டார்.

* எர்ணாவூர் டி.கே.எஸ். நகரில் உள்ள ஒரு டீக்கடையில் ரூ.25 ஆயிரம் திருடியதாக, அருப்புக்கோட்டையை சேர்ந்த குமரன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

* நங்கநல்லூர் 2–வது மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தேங்கிய குப்பைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற சென்றபோது வீட்டு உரிமையாளர் அகற்ற அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று குப்பைகளை அகற்றினர்.

* சென்னை ஜி.பி. சாலையில் உள்ள மதுபான பாரில் நேற்று அதிகாலை சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்த போலீசார் 32 வெளிநாட்டு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story