கம்போடியாவில் தற்கொலை செய்த காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் உடல் சென்னை வந்தது


கம்போடியாவில் தற்கொலை செய்த காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதர் உடல் சென்னை வந்தது
x
தினத்தந்தி 16 Oct 2017 5:30 AM IST (Updated: 16 Oct 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

கம்போடியாவில் தற்கொலை செய்துகொண்ட காஞ்சீபுரம் ரவுடி ஸ்ரீதரின் உடல் சென்னை வந்தது. 7 மணி நேரத்துக்கு பிறகு மகளிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.

ஆலந்தூர்,

காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்பருத்திகுன்றம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 49). பிரபல ரவுடி. இவர் மீது கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், நில அபகரிப்பு, கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி அம்பேத்கர் வளவன் கொலை வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஆஜராகாததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் கடந்த 4–ந் தேதி கம்போடியாவில் ரவுடி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை காஞ்சீபுரத்துக்கு கொண்டுவர அவரது மகள் மற்றும் உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

அதன்படி நேற்று காலை 11 மணியளவில் கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக ஸ்ரீதரின் உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ள ஸ்ரீதரின் மனைவி குமாரி, மகள் தனலட்சுமி, உறவினர்கள் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட போலீசார் விமான நிலைய சரக்ககப்பிரிவுக்கு வந்திருந்தனர்.

ஸ்ரீதரின் உடலை பெறுவதற்கான ஆவணங்களை சுகாதாரத்துறை, குடியுரிமை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகளிடம் தாக்கல் செய்தனர். இவற்றை பரிசீலித்த அதிகாரிகள் அனைத்து ஆவணங்களும் நகல்களாக உள்ளன. அவற்றுக்கு உரிய உண்மையான ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டனர்.

ஆனால் உண்மையான ஆவணங்கள் ஸ்ரீதரின் மகன் சந்தோஷ்குமாரிடம் இருப்பதாகவும், அவர் இரவில் சென்னைக்கு வந்ததும் உண்மையான ஆவணங்கள் காண்பிக்கப்படும். எனவே தற்போது தந்தையின் உடலை ஒப்படைக்குமாறு அவரது மகள் தனலட்சுமி கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து சுமார் 7 மணி நேரத்துக்கு பிறகு மாலை 6 மணியளவில் ஸ்ரீதரின் உடலை ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஸ்ரீதரின் உடலுக்கு விமான நிலைய போலீசார் தடையில்லா சான்று வழங்கினார்கள்.

பின்னர் ஸ்ரீதரின் உடலை அவரது மகளிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்பிறகு காஞ்சீபுரம் போலீசார் ஸ்ரீதரின் உடலை பெற்று பாதுகாப்புடன் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இன்று(திங்கட்கிழமை) பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என காஞ்சீபுரம் போலீசார் தெரிவித்தனர்.


Next Story