போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
பெங்களூருவில் போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
படுகாயம் அடைந்த போலீஸ்காரர், ரவுடிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடுகள் முன்பு நிற்கும் வாகனங்கள் மர்மநபர்களால் திருடப்பட்டு வந்தன. இதையடுத்து, வாகன திருட்டில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நேற்று முன்தினம் நள்ளிரவு கேம்பிரிட்ஜ் லே–அவுட்டில் அல்சூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்ய முயன்றனர். இந்த நிலையில், திடீரென்று அந்த நபர் தன்னிடம் இருந்த கத்தியால் போலீஸ்காரர் பசவராஜ் என்பவரை குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
இதில், போலீஸ்காரர் பசவராஜ் பலத்தகாயம் அடைந்தார். இதுபற்றி அல்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியா மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியா, போலீஸ்காரர் பசவராஜை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற நபரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அல்சூர், அதை சுற்றியுள்ள பகுதிகளில் அந்த நபரை தேடும் பணியில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் அல்சூர் அருகே உள்ள கோவில் முன்பாக அந்த நபர் நிற்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்தனர். உடனே அவரை சரண் அடையும்படி இன்ஸ்பெக்டர் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் சரணடைய மறுத்துவிட்டார்.
இதனால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அந்த நபரை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியா எச்சரித்தார். ஆனால் அவர் தன்னிடம் இருந்த கத்தியால் போலீசாரை தாக்க முயன்றதுடன், அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். உடனே இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியா அந்த நபரை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில், நபரின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள்.
பின்னர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவரது காலில் புகுந்த குண்டை அகற்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். போலீஸ் விசாரணையில், அந்த நபர் கவுதம்புரா அருகே வசித்து வரும் கார்த்திக் (வயது 27) என்று தெரியவந்தது. மேலும் கார்த்திக் ரவுடி என்பதும், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
கைதான கார்த்திக் மீது அல்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.