நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் கலெக்டர் ரோகிணி வேண்டுகோள்


நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் கலெக்டர் ரோகிணி வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 Oct 2017 4:30 AM IST (Updated: 16 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கலெக்டர் ரோகிணி வேண்டுகோள் விடுத்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் சங்ககிரி, தேவூர், அரசிராமணி, தாரமங்கலம், இடங்கணசாலை பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை கலெக்டர் ரோகிணி, நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் அவர்கள் டெங்கு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது கலெக்டர் ரோகிணி பேசியதாவது:-

சேலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் பணியாளர்கள் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சேலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அளவில் இரவு நேரங்களில் குப்பைகள் அள்ளுதல், சாக்கடை கால்வாய்களை சுத்தம் செய்தல் உள்ளிட்ட தூய்மைப்படுத்தும் பணிகளை பணியாளர்கள் ஒரு குழுவாக செயல்படுத்துகின்றனர். அந்த அடிப்படையில் சேலம் மாவட்டம் முழுவதும் இரவு, பகலாக 24 மணி நேரமும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பஸ் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடு வீடாக நேரடியாக களப்பணியாளர்கள் மூலமாகவும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 22 லட்சத்து 95 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் ஏற்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று டாக்டரின் உரிய ஆலோசனை பெற வேண்டும். நேரடியாக மருந்து கடைக்கு சென்று மருந்துகள் வாங்குவதோ, ஊசி போட்டுக்கொள்வதோ செய்தால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, பொதுமக்கள் அரசு எடுக்கும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் சங்ககிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சத்தை டெங்கு ஒழிப்பு பணி மேற்கொள்வதற்காக கலெக்டர் ரோகிணியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ராஜா எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் ராமதுரைமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story