ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார் ஸ்ரீரங்கத்தில் டி.டி.வி.தினகரன் பேட்டி


ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார் ஸ்ரீரங்கத்தில் டி.டி.வி.தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2017 4:30 AM IST (Updated: 16 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட தயார் என்று ஸ்ரீரங்கத்தில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருச்சி,

அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஸ்ரீரங்கத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு நிலவேம்பு கசாயம் மற்றும் வேட்டி, சேலை வழங்கினார்.

இதனை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் தான் அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து மாற்றினோம். அவருக்கு பதவி கிடைக்காததால் அவர் என்ன செய்தார் என்பது 1½ கோடி தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும். அவர் ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து அரசியல் நடத்தினார். ஜெயலலிதாவின் ஆன்மா அவரை நிச்சயம் மன்னிக்காது. டெங்கு காய்ச்சலுக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோர் எடுக்கவில்லை.

அதனால் தான் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதனை மூடி மறைக்க பார்க்கிறார்கள். இவர்களுக்கு மக்கள் மீது சிறிதும் அக்கறை இல்லை. ஆட்சியை காப்பாற்றி கொள்ளத்தான் நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பகல் கனவு கண்டு வருகிறார்கள். வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர்களுடைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். மக்கள் நலனுக்கான அரசை கொண்டு வருவோம்.

நான் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறேன். ஆனால் பொதுச்செயலாளர் தலைமையிலான ஆட்சிமன்றக்குழு கூடித்தான் யார் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்வார்கள். ஆனால் ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே எங்கள் தொண்டர்கள் தேர்தல் பணியாற்ற தயாராக இருக்கிறார்கள். பிரிந்தவர்கள் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தம்பிதுரை கூறி உள்ளார். தாய் கழகம் என்பது சசிகலா தலைமையிலான அணி தான். எனவே இதில் அனைவரும் சேர வேண்டும்.

1989-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுபட்டு தேர்தல் நடந்தபோது உண்மையான அ.தி.மு.க. எது என மக்கள் அடையாளம் காட்டினார்கள். அதேபோல் ஆர்.கே.நகர் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடந்தால் உண்மையான அ.தி.மு.க.வை மக்கள் அடையாளம் காட்டுவார்கள். ஸ்ரீரங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதி தரவில்லை. காவல்துறையில் யாராக இருந்தாலும் கடமை தவறினால் நிச்சயம் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் கனகராஜ், நாகநாதர் ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story