சர்னிரோடு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு முதியவர் காயம்
சர்னிரோடு ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்து, முதியவர் ஒருவர் காயம் அடைந்தார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மும்பையில் அண்மையில் ரெயில்வே நடைமேம்பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மும்பையில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தின் நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ளது சர்னிரோடு ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தையும், அங்குள்ள தாகுர்வார் பகுதியையும் இணைக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் தென்பகுதியில் பழமையான நடைமேம்பாலம் உள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணியளவில் இந்த நடைமேம்பாலத்தின் ஒரு பகுதி படிக்கட்டுகளுடன் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர் இடிபாடுகளுடன் கீழே விழுந்து காயம் அடைந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவரது பெயர் டோங்கர் ராவ் சிங்(வயது67) என்பது தெரியவந்தது. இடிந்து விழுந்த நடைமேம்பாலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
எனவே இதுபற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மேலும் இடிபாடுகளை அகற்றும்பணியில் ஈடுபட்டனர். இடிந்து விழுந்த நடைமேம்பாலத்தில் காலை நேரத்தில் அதிகளவில் ரெயில் பயணிகள் இந்த வழியாக வந்து செல்வார்கள். இந்த விபத்து பகல் வேளையில் நடந்து இருந்தால் பலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
நடைமேம்பாலம் இடிந்து விழுந்த இந்த சம்பவம் ரெயில் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், நேற்று பழுதடைந்த நிலையில் இருக்கும் அந்த நடைமேம்பாலத்தின் எஞ்சிய பகுதியை இடித்து தள்ளும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.