நெட்டப்பாக்கம் அருகே மகள்களுடன் பெண் தூக்கில் தொங்கினார் தப்பிய சிறுவனால் உயிருடன் மீட்கப்பட்டனர்


நெட்டப்பாக்கம் அருகே மகள்களுடன் பெண் தூக்கில் தொங்கினார் தப்பிய சிறுவனால் உயிருடன் மீட்கப்பட்டனர்
x
தினத்தந்தி 16 Oct 2017 3:50 AM IST (Updated: 16 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

நெட்டப்பாக்கம் அருகே குடும்ப கஷ்டத்தால் மகள்களுடன் பெண் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் தப்பிய சிறுவன் தெரிவித்த தகவலால் அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

வில்லியனூர்,

நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் அருகே உள்ள புதுநகரைச் சேர்ந்தவர் பொன்னம்பலம், வாடகை கார் டிரைவர். இவருடைய மனைவி விஜயா. இவர்களுக்கு அம்பிகா (17), அகிலா (14) என்ற 2 மகள்களும், விஷ்ணு (13) என்ற மகனும் உள்ளனர்.

போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் பொன்னம்பலம் சிரமத்துக்குள்ளானதாக தெரிகிறது. இதற்காக கடன் வாங்கி பல்வேறு தொழில்கள் செய்ய முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தனர். இதையொட்டி கணவன்–மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை பொன்னம்பலம் வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பிறகு வீட்டில் இருந்த விஜயா தனது 3 குழந்தைகளுடனும் பேசி தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி விஜயா, அவருடைய மகள்கள் அம்பிகா, அகிலா மற்றும் மகன் விஷ்ணு ஆகிய 3 பேரும் வீட்டுக்குள் தூக்கு கயிறு மாட்டி அதில் தொங்கினார்கள்.

அப்போது கழுத்து இறுகி சிறுவன் விஷ்ணு காலை உதைத்தபோது அருகில் இருந்த வாஷிங்மெஷின் மீது கால்பட்டது. உடனே அதன் மீது காலை ஊன்றி நின்றபடி கழுத்தில் மாட்டிய சுருக்கு கயிறை அவிழ்த்தான். பின்னர் கூச்சல்போட்டபடியே வீட்டில் இருந்து வெளியே வந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் நடந்த வி‌ஷயத்தை அழுதபடி கூறினான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த விஜயா, அகிலா மற்றும் அம்பிகா ஆகியோரை உயிருடன் மீட்டனர். உடனடியாக அவர்களை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைக்குப் பின் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு திரும்பினர்.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்–இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலைக்கு முயன்ற போது தப்பிய சிறுவன் தெரிவித்த தகவலால் மகள்களுடன் பெண்கள் உயிர்பிழைத்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story