செம்பூரில் பரிதாபம் குழந்தைகள் கண்முன்னே பெண் கல்லால் அடித்து கொலை கணவருக்கு வலைவீச்சு


செம்பூரில் பரிதாபம் குழந்தைகள் கண்முன்னே பெண் கல்லால் அடித்து கொலை கணவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Oct 2017 4:15 AM IST (Updated: 17 Oct 2017 3:27 AM IST)
t-max-icont-min-icon

செம்பூரில் குழந்தைகள் கண்முன்னே பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்த அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மும்பை,

மும்பை செம்பூர் கார்தேவ் நகர் பகுதியை சேர்ந்தவர் சூரஜ்(வயது34). இவரது மனைவி பபிதா(29). சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் சூரஜ் வீட்டிற்கு வந்தார். பபிதா கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினார். அப்போது அவர்களுக்கிடையே சிறு பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில், பபிதா கணவரிடம் ஆத்திரம் மூட்டும் வகையில் பேசியதாக தெரிகிறது. இதனால் சூரஜ் கோபமடைந்து அருகே கிடந்த ஒரு கல்லை எடுத்து பபிதாவின் தலையில் ஓங்கி அடித்தார்.

இதில், மண்டை உடைந்து பபிதா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதை பார்த்து குழந்தைகள் அலறினார்கள். சூரஜ் கோபத்துடன் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். படுகாயமடைந்த பபிதா ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி உள்ளார். குழந்தைகள் அழும் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஜன்னல் வழியாக பார்த்தனர்.

பபிதா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பபிதாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் பபிதா இறந்து விட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கோவண்டி போலீசார் பபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்து, தலைறைவான சூரஜை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story