கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தது 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தது 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2017 4:15 AM IST (Updated: 17 Oct 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து 6,409 கனஅடியாக குறைந்தது. இருப்பினும் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கிறது.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அதன் முழு கொள்ளளவை எட்டியது.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கிருஷ்ணகிரி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 52 அடியாகும். அணையின் நேற்றைய நீர்மட்டம் 50.80 அடியாகும். நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 8,529 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 8,830 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

நீர்வரத்து குறைந்தது

இந்தநிலையில் நேற்று மாலை அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து 6,409 கனஅடியாக வந்து கொண்டிருந்தது. அணை முழு கொள்ளளவை எட்டியதால் வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்ட போதிலும் கிருஷ்ணகிரி அணையின் மதகின் கீழ் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணையாற்று கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்று கரையோரத்தில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், தரைப்பாலங்களை கடக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கெலவரப்பள்ளி அணை

இதே போல ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 44.28 அடியாகும். அணையின் நேற்றைய நீர்மட்டம் 42.80 அடியாகும். அணைக்கு வினாடிக்கு 4,640 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 4,640 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. 

Related Tags :
Next Story