சென்னிமலை அருகே நாய்கள் கடித்ததில் 14 ஆடுகள் பலி


சென்னிமலை அருகே நாய்கள் கடித்ததில் 14 ஆடுகள் பலி
x
தினத்தந்தி 17 Oct 2017 4:15 AM IST (Updated: 17 Oct 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே நாய்கள் கடித்ததில் 14 ஆடுகள் பலியாகின.

சென்னிமலை,

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்ட கொம்மக்கோவில் பகுதியை சேர்ந்தவர் குப்பன் (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள ரங்கசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் ஒன்று சேர்ந்து கொட்டகைக்குள் புகுந்து ஆடுகளை சரமாரியாக கடித்து குதறின. இதில் 14 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. 7 ஆடுகள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொ ண்டு இருந்தன.

தகவல்

நேற்று காலை வழக்கம்போல் குப்பன் ஆடுகளை அவிழ்த்துவிட கொட்டகைக்கு சென்றார். அப்போது ஆடுகள் இறந்துகிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன்பின்னர் வடமுகம் வெள்ளோடு கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரகுமாருக்கும், ஈரோடு வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனச்சரகர் ரவீந்திரநாத், வனக்காப்பாளர் செல்லமுத்து, அரசு கால்நடை மருத்துவர்கள் திருநாவுக்கரசு, கவுதமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றார்கள்.

அச்சம்

அதைத்தொடர்ந்து கால்நடை டாக்டர்கள், இறந்து கிடந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார்கள்.

வனத்துறையினர் பதிவாகியிருந்த நாய்களின் கால் தடயங்களை ஆய்வு செய்தார்கள். அதன்பிறகு அவர்கள் கூறும்போது, 4-க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து வந்து ஆடுகளை கடித்திருக்கலாம் என்று கூறினார்கள்.

நாய்கள் கடித்ததில் 14 ஆடுகள் பலியானது வடமுகம் வெள்ளோடு பகுதியில் ஆடுகள் வளர்ப்பவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Related Tags :
Next Story