நகைக்கடையில் திருடிய பெண் கைது தப்பிச்செல்ல முயன்ற போது பஸ் நிலையத்தில் பிடிபட்டார்


நகைக்கடையில் திருடிய பெண் கைது தப்பிச்செல்ல முயன்ற போது பஸ் நிலையத்தில் பிடிபட்டார்
x
தினத்தந்தி 17 Oct 2017 3:45 AM IST (Updated: 17 Oct 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நகைக்கடையில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். தப்பிச்செல்ல முயன்ற போது பஸ் நிலையத்தில் வைத்து மடக்கிப்பிடித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு அலங்கம் பகுதியில் ஒரு நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்கு நேற்று முன்தினம் ஒரு பெண் நகை எடுப்பதற்காக வந்தார். அந்த பெண் நகை வாங்குவது போல சில நகைகளை பார்த்து விட்டு பின்னர் அங்கிருந்த நகைகள் பிடிக்கவில்லை என கூறி விட்டு வெளியே சென்று விட்டார்.

அந்த பெண் சென்ற பின்னர் கடை ஊழியர்கள் நகையை சரி பார்த்த போது அதில் 12 கிராம் நகையை காணவில்லை. நகையை அந்த பெண் தான் எடுத்துச்சென்று இருக்கலாம் என கருதினர். மேலும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது அதில் நகை வாங்குவதற்காக வந்த பெண் தான் நகையை திருடியது தெரிய வந்தது.

மடக்கிப்பிடித்தனர்

இதையடுத்து கடை ஊழியர்கள் அந்த பெண் பஸ் நிலையத்திற்கு சென்றிருக்கலாம் என கருதி அங்கு சென்று தேடிப்பார்த்தனர். அப்போது அந்த பெண் பஸ் ஏறுவதற்காக நின்று கொண்டு இருந்தார். இதையடுத்து ஊழியர்கள் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து அங்கிருந்த தஞ்சை மேற்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து விஜய் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மெலட்டூரை சேர்ந்த கணேசன் மனைவி மாரிக்கண்ணு (வயது30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாரிக்கண்ணுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Related Tags :
Next Story