கோவையில் வருமானவரித்துறை துணை கமிஷனர் மாயம் போலீஸ் தேடுதல் வேட்டை


கோவையில் வருமானவரித்துறை துணை கமிஷனர் மாயம் போலீஸ் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 17 Oct 2017 4:45 AM IST (Updated: 17 Oct 2017 3:49 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வருமானவரித்துறை துணை கமிஷனர் திடீரென்று மாயமாகிவிட்டார். முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகனான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை,

தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி செண்பகராமனின் மகன் சிவக்குமார்(வயது 38). கடந்த 2008-ம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். படித்து முடித்துவிட்டு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பீளமேடு சேரன்மாநகர் கவுதமபுரி பகுதியில் உள்ள மெடோஸ் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 13-ந்தேதி அதிகாலை ஒரு மணியளவில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சிவக்குமார் மாயமாகிவிட்டார்.

அவர் வீட்டைவிட்டு செல்லும்போது ஏ.டி.எம். கார்டு, கிரெடிட்கார்டு, செல்போன் மற்றும் அடையாள அட்டைகளை வீட்டில் வைத்துவிட்டு, ரொக்கப்பணம் 15 ஆயிரம் மற்றும் துணிமணிகளை ஒரு சூட்கேசில் வைத்து எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

அதிகாரி சிவக்குமாரை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி வந்தனர். ஆனால் செல்போன் உள்ளிட்டவற்றை விட்டுச்சென்றதால் அவர் எங்கு இருக்கிறார்? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சிவக்குமாரின் குடும்பத்தினர் பீளமேடு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.

சிவக்குமார் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதிகாலை 1 மணியளவில் சூட்கேசுடன் வீட்டில் இருந்து நடந்து சென்றது பதிவாகி இருந்தது.

சிவக்குமார் மாயமானதன் காரணம் தெரியவில்லை. குடும்ப பிரச்சினை காரணமாக மாயமாகி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். பெரிய தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் மிரட்டல் இருந்ததா?, வருமானவரித்துறை சோதனை தொடர்பாக ஏதாவது பிரச்சினை இருந்ததால் அதனால் அச்சம் அடைந்து மாயமாகிவிட்டாரா? என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

வருமானவரித்துறை துணை கமிஷனர் மாயமாகி இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story