தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென்று ஆய்வு நடத்தினார்கள்.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுவையில் பல்வேறு இடங்களில் இனிப்புகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் சிலர் தீபாவளி சீட்டு பிடித்து பணம் வசூலித்த நிலையில் வாடிக்கையாளர்களுக்கு தருவதற்காக கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பலகாரங்கள் செய்து வருகின்றனர்.
இந்த பலகாரங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து புதுவை உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி தன்ராஜ் தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதையொட்டி அவர்கள் கடை கடையாக சென்று தரமான எண்ணெய் மற்றும் பொருட்களால் பலகாரங்களின் தயாரிக்கப்பட்டவையா? என்பது குறித்து சோதித்தனர்.
சில பலகாரங்களை ஆய்வுக்காகவும் எடுத்துச் சென்றனர். மேலும் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து பலகாரங்கள் செய்யப்படும் இடங்களில் சுகாதாரமான முறையில் அவை செய்யப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள பலகாரங்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று உணவுப்பொருள் பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தெரிவித்தார்.