காஞ்சீபுரம் மாவட்டத்தில் 46 டாக்டர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 46 டாக்டர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருவதாக கலெக்டர் பொன்னையா தெரிவித்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 46 டாக்டர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். குறைந்தபட்சம் 3 நாட்கள் காய்ச்சல் இருக்கும்பட்சத்தில் அந்தந்த பகுதி டாக்டர்கள் கொண்ட குழுவினர் அந்த பகுதிகளில் நிலவேம்பு குடிநீர் கொடுத்து டெங்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் தண்ணீர் தேங்கியிருந்தால் டெங்கு கொசு ஒழிப்பு மருந்துகளை அடித்தும், டயர், பழைய பாட்டில்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்கியிருந்தால் அதனை அப்புறப்படுத்தியும் பணிபுரிந்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் அடுத்த திருப்புட்குழியில் பழைய சாமான்கள் குடோன் உள்ளது. மேலும் சோமங்கலத்தில் 10 லோடு டயர் உள்ளது. குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் டயர் குடோன் உள்ளது. இந்த குடோன்களில் டயர்கள் மற்றும் பழைய சாமான்களில் தண்ணீர் தேங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அதனை பணியாளர்கள் அப்புறப்படுத்தினார்கள். மேலும் அவர்களுக்கு ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த டாக்டர்கள் கொண்ட குழு விழிப்புடன் செயல்பட்டு, ஆங்காங்கு பரிசோதனை செய்து நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகிறது. டெங்கு குறித்து விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் டி.செந்தில்குமார் உடனிருந்தார்.