நாலச்சோப்ராவில் கர்ப்பிணியை குத்திக்கொலை செய்தவர் கைது
கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வசாய்,
பால்கர் மாவட்டம் நாலச்சோப்ரா மேற்கு டாங்கேவாடியை சேர்ந்த பெண் நிகத் சேக் (வயது24). 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பக்கத்து கட்டிடத்தில் வசித்து வரும் கணவரின் சகோதரர் இஸ்மாயில் சேக் அவரை தெருவில் ஓட, ஓட விரட்டி கொலை செய்தார். பின்னர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிகத் சேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இஸ்மாயில் சேக்கை வலைவீசி தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர் மலாடில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சுற்றிவளைத்து அவரை பிடித்து கைது செய்தனர்.
பின்னர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார்கள். இதில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த அண்ணன், தம்பி இருவரையும் நிகத் சேக் சூழ்ச்சி செய்து பிரித்துவிட்டதாகவும். அதனால் ஏற்பட்ட கோபத்தில் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்து உள்ளார்.