என்ஜினீயரிடம் ரூ.2½ கோடி மோசடி மனைவி, மகளுடன் ரியல் எஸ்டேட் அதிபர் கைது


என்ஜினீயரிடம் ரூ.2½ கோடி மோசடி மனைவி, மகளுடன் ரியல் எஸ்டேட் அதிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2017 4:45 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

பங்கு சந்தையில் லாபம் ஈட்டி தருவதாக கூறி ஓய்வுபெற்ற என்ஜினீயரிடம் ரூ.2½ கோடி மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், அவருடைய மனைவி மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி நேருநகரை சேர்ந்தவர் தங்கவேலு (வயது 71). நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவியும், மகன்களும் டாக்டர்கள். எனவே தங்கவேலு தன்னிடம் உள்ள பணத்தை வைத்து ஆஸ்பத்திரி கட்டுவதற்கு திட்டமிட்டார். இதற்காக அவர் நிலம் தேடியபோது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் புஞ்சைபுளியம்பட்டி அவ்வைவீதியை சேர்ந்த கே.கே.மணி (65) மற்றும் அவருடைய மனைவி சகுந்தலா ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது மணி, தனது மகள் கலைவாணி பிரியா கோவையில் உள்ள ஒரு பங்கு வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், அவளுக்கு பங்கு சந்தையில் சிறந்த அனுபவம் இருப்பதாகவும் கூறினார். மேலும், ஆஸ்பத்திரி கட்டும் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் என்றும் ஆலோசனை கூறினார். அப்போது, குறுகிய கால முதலீட்டில் பணத்தை சிறந்த லாபத்துடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், தேவைப்படும்போது முதலீட்டை திரும்ப பெற்று பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தங்கவேலுவிடம் மணி கூறி உள்ளார்.

மணியின் ஆசை வார்த்தைகளை நம்பிய தங்கவேலு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரூ.2 கோடியை கலைவாணி பிரியாவிடம் கொடுத்தார். அதன்பின்னர் 5 மாதங்களுக்கு முதலீட்டில் லாபம் கிடைத்ததாக தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.10 லட்சத்தை அவருக்கு கலைவாணி பிரியா கொடுத்து உள்ளார். இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் தனது அவசர தேவைக்காக ரூ.1½ கோடி கடன் வேண்டும் என்று தங்கவேலுவிடம் கலைவாணி பிரியா கேட்டு உள்ளார். இதனால் அவருக்கு தங்கவேலு ரூ.1½ கோடியை கடனாக கொடுத்தார். இந்தநிலையில் தங்கவேலு தன்னுடைய மொத்த பணத்தையும் திருப்பி தரும்படி கலைவாணி பிரியாவிடம் கேட்டார். ஆனால் கலைவாணி பிரியா ரூ.84 லட்சத்தை கொடுத்தார். மீதமுள்ள பணத்தை அவர் கொடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தங்கவேலு புகார் கொடுத்தார். அந்த புகாரில், மணி, அவருடைய மனைவி சகுந்தலா, மகள் கலைவாணி பிரியா ஆகியோர் கூட்டாக சேர்ந்து ரூ.2 கோடியே 66 லட்சம் மோசடி செய்துவிட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க வேண்டும் என்றும் அவர் கூறிஇருந்தார்.

அதன்பேரில் ஈரோடு மாவ ட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையடுத்து தங்கவேலுவிடம் ரூ.2 கோடியே 66 லட்சம் மோசடி செய்ததாக மணி, சகுந்தலா, கலைவாணி பிரியா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

Next Story