கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நிலுவை தொகை வழங்கக்கோரி நடந்தது


கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நிலுவை தொகை வழங்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

நிலுவை தொகை வழங்கக்கோரி விருத்தாசலம் பகுதியில் கரும்பு விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கடந்த 4 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.130 கோடி நிலுவை தொகையை இதுவரை வழங்கவில்லை. இந்த நிலுவை தொகையை உடனடியாக வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பேரூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி அருகே உள்ள பட்டாம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கார்மாங்குடி, பரவளூர் அண்ணா நகர் கிராமங்களில் நடந்த போராட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில கரும்பு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் தலைமையில் வீடுகள், கரும்பு வயல்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், கார்மாங்குடியில் விவசாயிகள் ஒன்று திரண்டு கரும்பு நிலுவை தொகையை வழங்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், இந்த வருட தீபாவளியை நாங்கள் கருப்பு தீபாவளியாக அனுசரிக்க போகிறோம். சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்க கோரியும், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அரசு அமல்படுத்த கோரியும், விரைவில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தில் விவசாயிகளை திரட்டி போராட உள்ளோம். இந்த போராட்டத்தில் அனைத்து விவசாயிகளும் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றார். 

Related Tags :
Next Story