காங்கிரசில் இணைவதற்கு முன்பு பா.ஜனதாவில் சேர சித்தராமையா தயாராக இருந்தார் குமாரசாமி பரபரப்பு பேட்டி


காங்கிரசில் இணைவதற்கு முன்பு பா.ஜனதாவில் சேர சித்தராமையா தயாராக இருந்தார் குமாரசாமி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசில் இணைவதற்கு முன்பு பா.ஜனதாவில் சேர சித்தராமையா தயாராக இருந்தார் என்று குமாரசாமி கூறினார்.

பெங்களூரு,

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பெங்களூருவில் உள்ள அவருடைய இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

மாநில மக்களுக்கு தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று நான் தற்போது ஓய்வில் இருக்கிறேன். அரசியல் நடவடிக்கைகளை தினமும் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொள்கிறேன். மனதில் உள்ளதை வெளிப்படுத்துவதை தடுக்க முடியாமல் நான் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

சித்தராமையா என்னை மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அப்போது என் மீது காட்டும் இந்த அன்பை மக்கள் மீதும் காட்டுங்கள் என்று கூறினேன். ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் பொய் சொல்வதில் நிபுணர்கள் என்றும், கர்நாடகத்தில் முன்பு இருந்த முதல்–மந்திரிகள் கொள்ளை அடித்ததே சாதனை என்றும் சித்தராமையா கூறி இருக்கிறார்.

முன்பு இருந்த முதல்–மந்திரிகள் என்றால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பணியாற்றிய அனைத்து முதல்–மந்திரிகளும் என்று அர்த்தமா?. இந்த கேள்விக்கு சித்தராமையா பதிலளிக்க வேண்டும். சித்தராமையா பிறந்தபோது அரிச்சந்திரன் அவருடைய வீட்டின் அருகில் இருந்தார் என்று தோன்றுகிறது. மழை வெள்ளத்தால் எங்கெங்கு பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றி சித்தராமையா அறிக்கை பெற்றாரா?.

வெளிநாடுகளில் வானிலை குறித்து முன்கூட்டியே துல்லியமாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதனால் அங்கு உயிர் சேதம் ஏற்படுவது இல்லை. மழையை எங்களால் தடுக்க முடியுமா? என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கேட்கிறார். அவர் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் பேசுகிறார். பெங்களூருவை பாதுகாப்பது யார்?. எடியூரப்பா இப்போது தான் சாலைகளில் உள்ள குழிகளை மூட முயற்சி செய்கிறார்.

முன்பு கர்நாடகத்தில் 5 ஆண்டுகள் பா.ஜனதா ஆட்சி இருந்தது. மாநகராட்சியிலும் பா.ஜனதா கட்சியே ஆட்சி அதிகாரத்தை நடத்தியது. அப்போது அவர்கள் என்ன செய்தனர்?. ஒன்றும் செய்யவில்லை என்பது வெட்கக்கேடானது. பா.ஜனதா ஆட்சியின்போது மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இதுவரை அந்த தீ எப்படி ஏற்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. இதை பா.ஜனதாவினர் சொல்ல வேண்டும். பா.ஜனதா ஆட்சியில் சாலையில் ஏற்பட்ட குழிகளை மூட 3 ‘பைதான்’ எந்திரங்கள் வாங்கப்பட்டன. அந்த எந்திரங்கள் எங்கு உள்ளன என்பது தெரியவில்லை. நகரில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் உடல் இன்னும் கிடைக்கவில்லை.

கால்வாய் சுற்றுச்சுவர் கட்டாமல் இருப்பதால் அருகில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான் சித்தராமையாவின் சாதனை. பெங்களூருவின் வளர்ச்சி குறித்து பகிரங்க விவாதத்திற்கு நான் தயார். சித்தராமையா தயாரா?. பெங்களூருவில், கால்வாய்களை தூர் வாரும் பணியில் முறைகேடு நடந்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நிதியை விட 22 சதவீதம் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் கிடைத்த பணம் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கு காங்கிரசார் அனுப்பி வைத்தனர். கருப்பு பட்டியலில் உள்ள ஒப்பந்ததாரர்கள் எத்தனை பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றி சித்தராமையா கூற வேண்டும்.

அடுத்த குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்க சித்தராமையா மீண்டும் கடன் வாங்க முடிவு செய்துள்ளார். மாநில அரசு செழிப்பாக இருந்தால், ஒப்பந்ததாரர்களின் கடன் பாக்கி ரூ.800 கோடியை பட்டுவாடா செய்ய எதற்காக கடன் வாங்க வேண்டும்?. சித்தராமையாவுக்கு ஆணவம் அதிகரித்துவிட்டது.

பெங்களூருவில் பல பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளன. ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக சித்தராமையா சொன்னார். ஆனால் அந்த பிரச்சினைக்கு அவர் தீர்வு காணவில்லை. பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தில் நாங்கள் பங்குதாரர்களாக உள்ளோம். ஆனால் எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்க வழிவகை உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பண தாகத்திற்கு ஆளாகியுள்ளனர். இவ்வளவு நாள் தின்றது போதும். இனிமேலாவது நகரில் வளர்ச்சி பணிகளை செய்யுங்கள். மக்கள் எங்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால், ஊழலை ஒழிப்பேன். அடுத்த மாதம்(நவம்பர்) 1–ந் தேதியில் இருந்து மீண்டும் அரசியல் பணிகளை தொடங்க முடிவு செய்துள்ளேன்.

எங்கள் கட்சி சார்பில் எச்.விஸ்வநாத் உன்சூர் தொகுதியிலும், ஜி.டி.தேவேகவுடா சாமுண்டீஸ்வரி தொகுதியிலும் போட்டியிடுவதில் எந்த சந்தேகமும் இல்லை. சித்தராமையா காங்கிரசில் சேருவதற்கு முன்பு பா.ஜனதாவில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவரும் அக்கட்சியில் இணைய தயாராக இருந்தார். கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story