சேலம் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு கலெக்டர் நடவடிக்கை


சேலம் மாநகராட்சி ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை 24 மணி நேரத்தில் அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக அம்மாபேட்டை மண்டலம் 40-வது வார்டில் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று ஆய்வு செய்தார். குமரகிரி ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் ராஜவாய்க்கால் வழியாக திருமணிமுத்தாற்றை சென்றடையும். இந்த நிலையில் அசோக்நகர் பகுதியில் ராஜவாய்க்காலில் நீர்வரத்து பாதைகளை அடைத்து, வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டிருப்பது ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

ராஜவாய்க்காலில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் அகற்றிட, சம்பந்தப்பட்ட வருவாய் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். பொதுமக்கள் நீர்வரத்து பாதைகளை தடுத்து, கட்டிடங்களை கட்டுவதோ அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதோ கூடாது எனவும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

பின்னர் 37-வது வார்டு சங்கிலி ஆசாரிகாடு, நீலாம்பாள் காடு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ரோகிணி, அங்கு வீடுகளில் பொதுமக்கள் சேமித்து வைத்திருந்த குடிநீர் பாத்திரங்களை ஆய்வு செய்தார். பொதுமக்கள் தேவைக்கும் மீறி 3 நாட்களுக்கு மேல் குடிநீரை சேமித்து வைத்து, கொசுப்புழுக்கள் உருவாகும் நிலையினை உருவாக்கக் கூடாது எனவும், வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

சாக்கடை கால்வாய்களில் பாலித்தீன் பைகள் மற்றும் திடக்கழிவுகள் போன்றவற்றை கொட்டக் கூடாது எனவும், குப்பைத் தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய வகையில் இருக்கும் வீடுகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் விடுதிகள், பேக்கரிகள், வாகனங்கள் பழுது நீக்கும் இடங்கள், பஞ்சர் கடைகள் வைத்திருப்போர் என நோய் தடுப்பு பணிகளுக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராத தொகையும் உடனடியாக வசூலிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஆர்.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், உதவி கலெக்டர் குமரேஷ்வரன், செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் சிபிசக்கரவர்த்தி, தாசில்தார் லெனின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story