கோவை ஆர்ய வைத்தியசாலையில் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஆயுர்வேத சிகிச்சை


கோவை ஆர்ய வைத்தியசாலையில் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு ஆயுர்வேத சிகிச்சை
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோவை ஆர்ய வைத்தியசாலையில் தங்கி ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருகிறார்.

கோவை,

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். பின்னர் அவர் கார் மூலம் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆர்யவைத்திய சாலைக்கு சென்றார். அங்கு அவருக்கு கேரள பாரம்பரிய வைத்திய முறைப்படி ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆர்யவைத்தியசாலைக்கு சென்றதும் அவர் தனது பாதுகாப்புக்கு வந்த போலீசாரை திரும்பி செல்லுமாறு கூறினார். தம்பிதுரைக்கு ஆயுர்வேத மூலிகைகள் மூலம் புத்துணர்வு சிசிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருசில நாட்கள் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக தம்பிதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி நிச்சயம் வெற்றி பெறும். பெரும்பான்மையான எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்ளின் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் இந்த கட்சி செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நிருபர்கள் “டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக தம்பிதுரை செயல்படுகிறார்” என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டி உள்ளாரே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க தம்பிதுரை மறுத்து விட்டார். 

Next Story