ரிஷிவந்தியம் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கணவருடன் செவிலியர் பலி


ரிஷிவந்தியம் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; கணவருடன் செவிலியர் பலி
x
தினத்தந்தி 18 Oct 2017 4:33 AM IST (Updated: 18 Oct 2017 4:33 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவருடன் செவிலியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரிஷிவந்தியம்,

புதுச்சேரி மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 62). இவரது மனைவி பானுமதி(58). இவர் ரிஷிவந்தியம் அருகே காட்டு எடையாரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பானுமதி, காட்டுசெல்லூர் கிராம மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுப்பதற்காக காட்டுசெல்லூருக்கு சென்றார்.

அங்கு அவர் நிலவேம்பு குடிநீர் கொடுத்து விட்டு, தனது கணவர் சரவணனுடன் மோட்டார் சைக்கிளில் பல்லவாடி கிராமம் நோக்கி புறப்பட்டார். திருவண்ணாமலை கோட்டை நெடுஞ்சாலையில் பல்லவாடி கைகாட்டி அருகே சென்றபோது, எதிரே திருச்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று சரவணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பானுமதி, சரவணன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ரிஷிவந்தியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பானுமதி, சரவணன் ஆகியோர் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து 2 பேர் உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் சரவணன் மகன் விஜய் புகார் கொடுத்தார். அதன் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி வழக்குப்பதிந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த கணேசன் மகன் மோகன்(26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்- மனைவி பலியான சம்பவம் திருக்கனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story