ஆரணி அருகே விவசாய நிலத்தில் 9-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு


ஆரணி அருகே விவசாய நிலத்தில் 9-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 19 Oct 2017 4:30 AM IST (Updated: 19 Oct 2017 2:21 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே வயல் வெளியில் 9-ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே முள்ளண்டிரம் கிராமத்தையொட்டி உள்ள வயல்வெளி பகுதியில் திருவண்ணாமலையில் செயல்படும் மரபுசார் அமைப்பினர் கள ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இதில் தொல்லியல் ஆர்வலரான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் அங்கு பாதி புதையுண்ட நிலையில் இருந்த பழங்கால கல் ஒன்றை கண்டறிந்தனர். அதில் அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டிருந்தது.

நிலத்தின் உரிமையாளரிடம் அவர்கள் விசாரித்தபோது “இதனை நாங்கள் எல்லைசாமியாக கருதுவதால் தை மாதத்தில் மட்டும் பொங்கல் வைத்து வழிபடுவோம்” என்றனர். பின்னர் நிலத்தின் உரிமையாளர் ஒப்புதலுடன் சுத்தம் செய்தபோது அது அய்யனார் சிற்பம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அந்த சிற்பம் செதுக்கப்பட்டிருந்த கல் 4 அடி உயரமும், 3 அடி அகலமும் கொண்டதாக இருந்தது.

மேலும் இரு காதுகளிலும் வட்டமான பத்ர குண்டலம் அணிந்து திருவாய், அகன்ற தோள் ஆகிய அம்சங்களுடன் பிறைநிலவுடன் சிற்பம் உள்ளது. இதுபோன்று பிறைநிலவுடன் வெகு சில இடங்களில் மட்டுமே அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் அய்யனாரின் வாகனமான யானையும் உள்ளது.

இந்த காரணிகளை வைத்து பார்க்கையில் இதன் காலம் 9-ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 10-ம் நூற்றாண்டின் தொடக்கமாக கருதலாம் என உருவவியல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 13-ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த சம்புவராயர்கள் காலத்திய சிற்பங்களும், கல்வெட்டுகளும் அடங்கிய தடயங்களே இதுவரை கிடைத்து வந்தன. தற்போது கிடைத்துள்ள சிற்பம் அபூர்வமானதாகும். எனவே இந்த பகுதியில் மேலும் கள ஆய்வு செய்தால் ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டார தொன்மையை சம்புவராயர் காலத்திலிருந்து மேலும் பின்னுக்கு எடுத்துச்செல்லலாம் என தொல்லியல் ஆர்வலர் ராஜபன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தாசில்தார் சுப்பிரமணி, வருவாய் ஆய்வாளர் தரணிகுமரன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன் ஆகியோர் அந்த சிற்பத்தை பார்வையிட்டனர். தாசில்தார் கூறுகையில் இது குறித்து தொல்லியல் துறைக்கு தெரியப்படுத்தப்படும் என்றார்.

Next Story